தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆட்டுகால் சூப் பிரியரா நீங்க? ஜாக்கிரதை.. 900 கிலோ கெட்டுப் போன ஆட்டுக்கால்கள், இறைச்சிகள் பறிமுதல்! - officers seized spoilt meat

Food Safety officers seized spoilt meat: சென்னை சைதாப்பேட்டையில் 900 கிலோ கெட்டுப் போன ஆட்டுக்கால்கள், இறைச்சிகளை சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அப்புறப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட கெட்டுப் போன ஆட்டுக்கால்கள்
பறிமுதல் செய்யப்பட்ட கெட்டுப் போன ஆட்டுக்கால்கள் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2024, 9:16 PM IST

சென்னை:சென்னை சைதாப்பேட்டையில் கெட்டுப்போன ஆட்டு கால்கள் விற்பனை செய்யப்படுவதாக சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறைக்கு தகவல் வந்ததன் அடிப்படையில், சைதாப்பேட்டையில் உள்ள இறைச்சி கடைகள், குடோன்களில் சென்னை உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சதீஷ் குமார் ஆய்வு மேற்கொண்டார்.

அதில் 900 கிலோ கெட்டுப் போன ஆட்டுக்கால் மற்றும் ஆட்டிறைச்சி பறிமுதல் செய்து, அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் கெட்டுப் போன இறைச்சிகள் விற்பனை செய்த கடைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சதிஷ் குமார் கூறுகையில், “கடந்த சில தினங்களுக்கு முன்பு எழும்பூரில் 1700 கிலோ கெட்டுப் போன ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யபட்டு இருந்தது. அதன் அடிப்படையில் அவை எங்கெல்லாம் விநியோகம் செய்யப்படுகிறது என விசாரித்ததின் அடிப்படையில், சைதாப்பேட்டையில் கெட்டுப்போன ஆட்டுக் கால்கள் விற்பனை செய்யப் படும் சம்பவம் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து ஆய்வு செய்தோம், இந்த ஆய்வில் 600 முதல் 700 கிலோ ஆட்டுக் கால்கள் நீண்ட நாட்களாக குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு விற்பனை செய்து வருவதை கண்டறியப்பட்டது. பின் அவற்றை பரிசோதனை செய்தோம். பரிசோதனையில் 1000 கணக்கான ஆட்டுக் கால்கள் நீர்த்துப் போன நிலையில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு கெட்டுப் போய் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த கடைகளில் இருந்து நட்சத்திர உணவகங்கள் என எந்தவிதமான உணவகங்களிலும் இறைச்சிகளை வாங்க வாய்ப்பிருக்கிறது. முக்கியமாக இதுபோன்ற கடைகளில் இருந்து டெல்லி, கன்னியாகுமரி போன்ற பகுதிகளுக்கு இறைச்சிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. வெளி மாநிலங்களில் இருந்து ரயில் மூலமாக கொண்டு வரப்படும் இறைச்சிகள் தான் இவை, ஆனால் இவற்றிற்கு முறையாக எந்தவிதமான பில்களும் இல்லை. எந்தவிதமான பில்களும் இல்லாமல் தவறான முறையில் இவற்றை விற்பனை செய்து வருகிறார்கள்.

சிறிய கடைகளில் இருந்து பெரிய கடைகள் வரை இங்கிருந்து இறைச்சி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இங்கு பறிமுதல் செய்யப்பட்டவை ஆட்டுக் கால்கள் மட்டுமே, குறைந்தபட்சம் ஒரு மாதமாக இவை பதப்படுத்தி வைத்திருக்க கூடும். குளிர்சாதன பெட்டிகள் முறையாக பராமரிப்பு இன்றி உடைந்து உள்ளது.

பழுதான குளிர்சாதன பெட்டிகள் இவை அடைத்து வைக்கப்பட்டு உள்ளதால் இவை எளிதில் கெட்டுப் போயிருக்கும். வெளியில் உப்புக் கண்டம் போட்டு வைத்திருக்கும் ஆட்டுக் கால்களை பராமரிப்புடன் விற்பனை செய்தால் அவற்றை வாங்கி உண்ணலாம். ஆனால் பழுதான குளிர்சாதன பெட்டியில் வைத்து கெட்டுப்போன ஆட்டுக் கால்களை விற்பனை செய்வதும், மக்கள் இதனை வாங்கி உண்ணுவதும் உடல் பாதிப்புகள், புட் பாய்சன் உள்ளிட்ட பிரச்னைகளை கொண்டுவரும். அதனால் இந்த கடையில் இருந்து இறைச்சிகளை வாங்கியவர்கள் குறித்து விசாரித்து வருகிறோம்” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:5 நாட்கள் பயணம் செய்து ரயிலில் வந்திறங்கிய 1,600 கிலோ கெட்டுப்போன இறைச்சி.. சென்னையில் அதிர்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details