சென்னை: சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய்த்துறை சிறப்பு மருத்துவராக பணியாற்றி வந்த மருத்துவர் பாலாஜியை (53) கத்தியால் குத்தியதாக நோயாளியின் உறவினர் விக்னேஷ் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். இவரது தாயார் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், முறையாக சிகிச்சை வழங்கவில்லை என கூறி விக்னேஷ் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விக்னேஷை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்திருக்கும் நிலையில், மருத்துவ சங்கங்கள் மாநிலம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் உள்ள ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, கிண்டி கலைஞர் மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பணியை புறக்கணித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
பணியில் இருக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி இந்த போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்களும் மருத்துவர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கிண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜியை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வரும் போராட்டத்திலும் அவர் கலந்து கொண்டார்.
இந்தநிலையில் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காவல் உதவி மையம் அமைக்கப்படும் எனவும், ஒவ்வொரு மருத்துவமனைக்கும் 10 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரையிலும 19 அரசு மருத்துவமனைகள் உள்ளன. தற்போது 9 அரசு மருத்துவமனைகளில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 10 அரசு மருத்துவமனைகளிலும் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டு காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என சென்னை காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மருத்துவர் பாலாஜியின் உடல்நலம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மருத்துவர்களின் பாதுகாப்புக்கு 100 சதவீதம் உறுதியளிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார். மருத்துவரை கத்தியால் தாக்கிய விக்னேஷ் என்ற நபர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டார்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவ மாணவி கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் மருத்துவ கட்டமைப்புக்கு தேவையான சீர் திருத்தங்கள் குறித்து ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டதாக மருத்துவ அமைச்சர் குறிப்பிடுகிறார். இதன்படி நோயாளிகளுடன் மருத்துவமனைக்கு வரும் பார்வையாளர்களுக்கு கைகளில் அணியும் வகையிலான பட்டை வழங்கப்படுகிறது. ஆனால் மருத்துவர் பாலாஜி மீது தாக்குதலில் ஈடுபட்ட நபர் இந்த கைப்பட்டை இன்றியே மருத்துவமனைக்குள் நுழைந்திருக்கிறார் என்பதையும், இது பாதுகாப்பில் அலட்சியம் இருப்பதைக் காட்டுவதாகவும் மருத்துவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.