சென்னை: சென்னை வடபழனியில் மொபைல் சர்வீஸ் கடையில் வேலை செய்து வந்தவர், ஊர்மிள் எஸ்.டோலியா. இவர் கடையில் வியாபாரம் சரிவர நடக்காமல் இருந்துள்ளது. இந்த நிலையில், தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து, கடந்த 2018ஆம் ஆண்டு தேனாம்பேட்டையில் உள்ள தன்னுடைய வீட்டிலிருந்து, இரவு தன்னுடைய 4 வயது இளைய மகன் மாதவ்வை அழைத்துக் கொண்டு மொபைல் கடைக்குச் சென்று, யாரும் இல்லாத நேரத்தில் சிறுவனைக் கொன்று, தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும், கணவரும், மகனும் வீட்டிற்கு திரும்பாததால், டோலியாவின் மனைவி கலைச்செல்வி, கணவர் வேலை செய்யும் மொபைல் சர்வீஸ் கடையின் மேனேஜருக்கு போன் செய்து தகவல் கேட்டறிந்தபோது, கடையினுள் சிறுவனும், டோலியாவும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பின்னர், இதுகுறித்து அருகில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். பின்னர், இருவரையும் ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அப்போது, சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், மற்றொருவர் பிழைத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஊர்மிள் எஸ்.டோலியா மீது வடபழனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். கொலைச் சம்பவம் குறித்து ஜார்ஜ் டவுனில் உள்ள 16வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி புவனேஸ்வரி முன் வழக்கு விசாரணை நடைபெற்று வந்துள்ளது.