சென்னை: அரியலூர் மாவட்டம், திருமானூரைச் சேர்ந்த அன்பழகன் மற்றும் மதுரை மாவட்டம் பொன்மேனியைச் சேர்ந்த பாலு ஆகியோர், கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம், சென்னை தி.நகரில் தெற்கு போக்குவரத்து சாலையில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் அருகே மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் நின்றுள்ளனர்.
அப்போது மதுபோதையில் கோயில் அருகே நிற்பது குறித்து, அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும், ராஜ்குமாரை பீர் பாட்டிலைக் கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். இது தொடர்பாக ராஜ்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், நீதிபதி எஸ்.முருகானந்தம் முன்பு இன்று (பிப்.14) விசாரணை நடைபெற்றது. அப்போது, காவல்துறை தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.பகவதிராஜ் ஆஜரானார்.
தொடர்ந்து, இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய நீதிபதி, இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா 51 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத் தொகையில் ஒரு லட்சம் ரூபாயை, தாக்குதலுக்கு உள்ளான ராஜ்குமாருக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க:பற்கள் பிடுங்கிய விவகாரம்: ஏஎஸ்பி பல்வீர்சிங் உள்பட 14 பேர் ஆஜராக நீதிபதி உத்தரவு..!