சென்னை: சென்னையில் 5 வயது சிறுமியை நாய் கடித்துப் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்களை அச்சுறுத்தி, அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வளர்க்கப்படும் நாய்களின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியை நேற்று (திங்கட்கிழமை) ராட்வீலர் நாய்கள் கடித்துள்ளது. இதில், படுகாயமடைந்த சிறுமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து, ஆயிரம் விளக்கு போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நாய்கள் அப்பகுதியில் வசித்து வரும் புகழேந்தி என்பவரின் வளர்ப்பு நாய் என்பதும், அவர்களின் அஜாக்கிரதையால் இச்சம்பவம் நிகழ்ந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று சம்பவம் நடைபெற்ற பூங்கா பகுதியில் ஆய்வுசெய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “மத்திய அரசால் தடை செய்யப்பட்ட 23 இன நாய்களில் இந்த ராட்வீலர் நாய் ரகமும் ஒன்று. நாய் வளர்ப்பு ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கில், இந்த தடைக்கு பல்வேறு உயர் நீதிமன்றங்களில் இடைக்காலத் தடை தற்போது விதிக்கப்பட்டுள்ளது.
சிறுமியைக் கடித்த நாய்க்கு மாநகராட்சியிடம் உரிமம் பெறவில்லை. இதற்காக உரிமையாளருக்கு நோட்டீஸ் கொடுத்து விசாரிக்க இருக்கிறோம். நாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளுக்கு மாநகராட்சி பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பிராணிகளிடமிருந்து மக்களைக் காப்பதில் சட்டச் சிக்கல்கள் உள்ளன. இது தொடர்பாக அரசு மற்றும் உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்று தீர்வு காணப்படும்” இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி பூங்காக்களில் வளர்ப்பு நாய்களைக் கொண்டுவர புதிய கட்டுப்பாடுகளை விதித்து, ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
பூங்காக்களில் வளர்ப்பு நாய்களுக்குக் கட்டுப்பாடு:
- பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காக்களில் பாதுகாப்புகள் கடுமையாக்கப்படும்.
- வளர்ப்பு நாயின் உரிமையாளர் ஒரு நபர், ஒரு நாயை மட்டுமே பூங்காக்களுக்குள் அழைத்து வர வேண்டும்.
- பூங்காவிற்குள் அனுமதிக்கப்படும் ஒவ்வொரு செல்லப் பிராணிகளும், கயிறுகள் மூலம் கட்டப்பட்டு, யாரையும் கடிக்காத வகையில், வாயில் கவசம் கட்டாயம் அணிவித்திருந்தால் மட்டுமே பூங்காவுக்குள் அனுமதிக்க வேண்டும்.
- பூங்காவிற்குள் குழந்தைகள் விளையாடும் இடத்தில் நாய்களுக்கு அனுமதி இல்லை.
- நாய்களுக்குத் தடுப்பூசி போட அறிவுறுத்தப்படும். மேலும். செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
- தெரு நாய்கள் மற்றும் கயிறு கட்டப்படாத நாய்களைப் பூங்காக்களுக்குள் அனுமதிக்கக்கூடாது.
- முறையாகப் பராமரிக்காத, உரிமம் பெறாத நாய்களின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஐந்து வயது சிறுமியைக் கடித்துக் குதறிய இரண்டு ராட்வீலர் நாய்கள், நேற்றிரவு சென்னையில் இருந்து மதுரைக்கு உரிமையாளர் புகழேந்தி எடுத்துச் சென்றுள்ளார் என சென்னை மாநகராட்சி கால்நடை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நாய்கள் அடுத்த 7 நாட்களுக்கு அகற்ற வேண்டும் என ஏற்கனவே மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், இரண்டு நாய்களும் மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நெல்லை ஜெயக்குமார் மர்ம மரணம்; உடற்கூறாய்வு முடிவில் வெளிவந்த பகீர் தகவல்! - TIRUNELVELI JAYAKUMAR DEATH Case