சென்னை:வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திலிருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்களுக்கும், வேட்பாளருடன் சேர்த்து 5 நபர்களுக்கும் மட்டுமே அனுமதி என சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலரும், கூடுதல் தலைமைச் செயலாளரும், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளருமான ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 18வது மக்களவைக்கான பொதுத்தேர்தல், தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதன் அடிப்படையில், சென்ணை மாவட்டத்திற்குட்பட்ட வடசென்னை மக்களவைத் தொகுதி, தென்சென்னை மக்களவைத் தொகுதி மற்றும் மத்திய சென்னை மக்களவைத் தொகுதி ஆகிய மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 3 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்புமனுக்களானது, மார்ச் 20ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையிலான (அரசு விடுமுறை நாட்கள் தவிர) நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தேர்தல் நடத்தும் அலுவலர்களால் பெறப்படும்.
வேட்பு மனுத்தாக்கல் 20ஆம் தேதி துவங்கும். வேட்புமனு தாக்கல் செய்ய 27ஆம் தேதி கடைசி நாள். 28ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடத்தப்படும். 30ஆம் தேதி வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள். ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
சென்னை வடக்கு நாடாளுமன்றத் தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர், வடக்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகம் பெருநகர சென்னை மாநகராட்சி எண்.62 பேசின்பிரிட்ஜ் சாலையிலும், சென்னை தெற்கு நாடாளுமன்றத் தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர், தெற்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகம், பெருநகர சென்னை மாநகராட்சி அடையாறு அலுவலகத்திலும், சென்னை மத்திய நாடாளுமன்றத் தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர், மத்திய வட்டார துணை ஆணையாளர் அலுவலகம், பெருநகர சென்னை மாநராட்சி புல்லா அவென்யூ ஆகிய இடங்களில் வேட்புமனு பெறப்படும்.
வேட்பு மனுக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரையில் மட்டுமே பெறப்படும். வேட்புமனுத் தாக்கல் செய்யும் நிகழ்வின் போது, நேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திலிருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்புமனுத் தாக்கலின்போது தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திற்குள் வேட்பாளருடன் சேர்த்து 5 நபர்கள் மட்டுமே வேட்புமனு செய்ய அனுமதிக்கப்படுவர். வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் நாட்களில் மாலை 3 மணிக்கு மேல் தேர்தல் நடத்தும் அலுவலக வாளகத்தில் ஒருவருக்கும் அனுமதியில்லை” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி ரோட் ஷோ.. திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார்!