சென்னை:செம்பியம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்தவர், செந்தில்குமார். இவர் மீது பணியில் ஒழுங்கீனம், பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட மூன்று புகார்கள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக, சென்னை புளியந்தோப்பு துணை காவல் ஆணையர் ஈஸ்வரன் விசாரணை நடத்தி வந்தார்.
இந்த விசாரணையில், செந்தில்குமார் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் உறுதியானதால் அவரைப் பணியிடைநீக்கம் செய்து புளியந்தோப்பு துணை காவல் ஆணையர் ஈஸ்வரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அமலாக்கத்துறை சோதனை: நங்கநல்லூர், வீரமாமுனி தெருவில் வசித்து வரும் கண்ணகி என்பவர் மகளிர் சுய உதவிக்குழு ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டிற்கு நேற்று திடீரென வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு பணப் பரிவர்த்தனை மற்றும் கணக்கு தொடர்பான ஆவணங்களைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அதேபோல், சென்னை திருவிக நகரில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் டேனியல் செல்வக்குமார் வீட்டிலும், 6-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் வெளிநாடுகளில் முதலீடு உள்ளிட்ட புகார்கள் அடிப்படையில் எழும்பூர், புதுப்பேட்டை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.