சென்னை:சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி பல பெண்களிடம் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள பாஜக பெண் நிர்வாகி மற்றும் அவரது மகனை போலீசார் தேடி வருகின்றனர். இதே போல் ரயில்வேயில் லோகோ பைலட் வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞரிடம் 15 லட்சம் ரூபாய் வரை பண மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெண்களிடம் மோசடியில் ஈடுபட்ட பாஜக பெண் நிர்வாகி:தமிழக பாஜகவில் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாவட்டச் செயலாளராக நெல்லை பகுதியைச் சேர்ந்த விஜயா என்பவர் இருந்து வருகிறார். இவரது மகன் மதன் பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருடன் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் கணவன் மதனும், மாமியாரும் இணைந்து அவரது மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படும் நிலையில் மதனின் மனைவி ஒரு நாள் அவரது செல்போனை எடுத்து மின்னஞ்சலை சோதனை செய்துள்ளார். அப்போது சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பல பெண்களிடம் மதன் மோசடியில் ஈடுபட்டு இருப்பதும் இதற்கு அவரது தாய் உடனடியாக இருந்ததும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து தொடர்ந்து கணவன் மனைவி இருவருக்கும் பிரச்னைகள் ஏற்பட்டு வந்ததை தொடர்ந்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் மதன் சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தன்னை ஏமாற்றியதாக பெண் ஒருவர் சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள மதன் மற்றும் அவரது தாய் விஜயாவை தேடி வருகின்றனர்.
ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக இளைஞரிடம் ரூ.15 லட்சம் மோசடி:ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வினோத் மைக்கேல் என்பவர் சென்னை பெரம்பூரில் தங்கி தனியார் உணவகத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். இவர் ரயில்வேயில் வேலை வாங்க வேண்டும் என்பதற்காக சிலரை அணுகி உள்ளார். அப்போது விஜயகுமார் என்பவர் வினோத் மைகளுக்கு அறிமுகமாகியுள்ளார்.
இதையடுத்து ரயில்வே துறையில் லோகோ பைலட் வேலை வாங்கி தருவதாக கூறிய வினோத் மைக்கலிடம் இருந்து விஜயகுமார் 15 லட்ச ரூபாய் பணத்தை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரயில்வே துறையில் வேலை கிடைத்தது போல் போலியாக தயாரிக்கப்பட்ட பணி நியமான ஆணை ஒன்றை விஜயகுமார் வினோத் மைக்கலிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து வினோத் மைக்கேல் அந்த பணி ஆணையை எடுத்துக்கொண்டு மும்பை ரயில்வே துறை அலுவலகத்திற்கு சென்று விசாரித்துள்ளார்.
அப்போது அது போலியான பணி ஆணை என அங்கிருந்த அலுவலர்கள் தெரிவித்த நிலையில் அதிர்ச்சி அடைந்த வினோத் மைக்கல் சென்னை செம்பியம் காவல் நிலையத்தில் இந்த மோசடி குறித்து புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள விஜயகுமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.