தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை மற்றும் புறநகரில் நள்ளிரவு முதல் கனமழை... வாகன ஓட்டிகள் கடும் அவதி..! - CHENNAI RAIN

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. வேளச்சேரி குடியிருப்பு பகுதிகளில் மழை சூழ்ந்து காணப்படுகிறது. வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வாகன ஓட்டிகள் அவதி
வாகன ஓட்டிகள் அவதி (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 12, 2024, 1:13 PM IST

சென்னை: மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. கேளம்பாக்கம், வண்டலூர், பெருங்களத்தூர், மீனம்பாக்கம், வேளச்சேரி, கிண்டி, அண்ணா சாலையில் இன்று காலை முதல் விட்டுவிட்டு பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. கொட்டும் கனமழையால் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாகி அவதியுற்றனர்.

வங்க கடலில், இலங்கை அருகே உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் விட்டு விட்டு லேசான முதல் மிக கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக, சென்னை புறநகர் பகுதிகளான வேளச்சேரி, ஆதம்பாக்கம், நங்கநல்லூர், ஆலந்தூர், மீனம்பாக்கம், பல்லாவரம், விமான நிலையம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், சேலையூர், மடிப்பாக்கம், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் தொடர்ந்து விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக, ஜிஎஸ்டி சாலை மற்றும் வேளச்சேரி ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது.

இதையும் படிங்க:விசாரணையை சசிகலா தவிர்க்க முடியாது.. மோசடி வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்க உத்தரவு - சென்னை ஐகோர்ட்

இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட வெளியில் வர முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும், சாலைகளில் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

மேலும், இதே போல் இன்று முழுவதும் தொடர்ந்து மழை பெய்து கொண்டு இருந்தால் வேளச்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் மழை நீர் தேங்கி பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மின்மோட்டோர்களை தயார் நிலையில் வைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோல் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கியுள்ளது. மேலும், தாம்பரம் ரயில்வே சுரங்க பாதையில் தற்போது முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கி உள்ளதால், தொடர்ந்து மழை பெய்தால் சுரங்கப்பாதை முழுவதும் நிரம்பி போக்குவரத்து துண்டிக்கப்படும் என்பதால் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக மின் மோட்டார் வைத்து சுரங்க பாதையில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details