தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் மோசமான வானிலை: விமான சேவைகள் பாதிப்பு! - CHENNAI AIRPORT

சென்னை விமான நிலைய பகுதிகளில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

விமானம் கோப்புப்படம்
விமானம் கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 11, 2024, 1:21 PM IST

சென்னை:சென்னை விமான நிலையத்தில் மோசமான வானிலை நிலவும் காரணத்தால், விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூரு திரும்பிச் சென்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து, இலங்கை மற்றும் தமிழ்நாடு கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து வருவதால், டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களுக்கு வானிலை மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு இன்று (டிசம்பர் 11) காலை 10 மணியளவில் டெல்லியில் இருந்து 152 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் வந்ததுள்ளது. ஆனால், விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த நேரத்தில் மோசமான வானிலை நிலவியது. அதாவது, லேசான காற்றுடன் கூடிய மழையும் பெய்து கொண்டு இருந்தது.

விமான சேவை பாதிப்பு:

சென்னை விமான நிலையம் (ETV Bharat Tamil Nadu)

இதையடுத்து இண்டிகோ விமானம் இந்த மோசமான வானிலையில் சென்னையில் தரையிறங்குவது பாதுகாப்பானது இல்லை என்று விமானி கருதியதால், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டுள்ளார். இதையடுத்து பெங்களூருக்கு திருப்பிச் செல்லும்படி விமானக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னையில் தரையிறங்காமல் பெங்களூருக்குத் திரும்பிச் சென்றது.

இதையும் படிங்க:வேன்களுக்கு ரூ.330; அப்போ காருக்கு? சென்னை விமான நிலைய பார்க்கிங் கட்டணம் திடீர் உயர்வு!

மேலும் இந்த விமானம், வானிலை நிலவரம் சீரடைந்த பின்பு சென்னைக்கு திரும்பி வரும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமானது, டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு காலை 10 மணிக்கு வந்தடையும். அதேபோல், காலை 10:45 மணியளவில் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் செல்லும்.

விமான பயணிகள் கடும் அவதி:

விமானம் திரும்பிச் சென்ற வரைபட காட்சி (ETV Bharat Tamil Nadu)

ஆனால், இந்த விமானம் மோசமான வானிலை காரணமாக பெங்களூருக்கு திரும்பிச் சென்று விட்டதால், சென்னையில் இருந்து டெல்லிக்கு 10:45 மணிக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், இன்று பகல் ஒரு மணிக்கு மேல் புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. அதனால், சென்னையிலிருந்து இந்த விமானத்தில் டெல்லிக்கு செல்லவிருந்த 148 பயணிகள் சென்னையில் உள்நாட்டு விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

அதேபோல், மங்களூரில் இருந்து இன்று காலை 10:40 மணிக்கு சென்னைக்கு வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மோசமான வானிலை காரணமாக இன்று காலை 11:40 மணிக்கு மங்களூரில் இருந்து சென்னைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது, சென்னை விமான நிலையத்தில் மோசமான வானிலை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details