சென்னை:சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வரும் 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வெடிகுண்டு வழக்குகள், நக்சலைட் தொடர்பான வழக்குகள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன.
தடா வழக்குகளுக்கான இந்த சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 1990 மற்றும் 1991ம் ஆண்டு சென்னை கியூ பிரிவு காவல்துறையால் தடா சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 3 வெடிகுண்டு வழக்குகள், சிவகங்கை கியூ பிரிவு காவல்துறையால் தடா சட்டத்தின் கீழ் 1991ல் பதிவு செய்யப்பட்ட வழக்கு, திண்டுக்கல் கியூ பிரிவு காவல்துறையால் 1991ல் தடா சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வெடிகுண்டு வழக்குகள் ஆகியவை நிலுவையில் உள்ளன.
சுமார் 32 ஆண்டுகளுக்கும் மேல் நிலுவையில் உள்ள இந்த வழக்குகளில் தேடப்படும் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் பலருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பிடிவாரண்டுகளை சம்மந்தப்பட்ட காவல்துறையினர் அமல்படுத்தவில்லை.
இந்நிலையில், இந்த வழக்குகள் 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ. சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் தரப்பில், நீதிமன்றத்தின் பிடிவாரண்டை அமல்படுத்த கால அவகாசம் கேட்கப்பட்டது.