செங்கல்பட்டு: தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, தாம்பரத்தில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தினை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் சுமார் 12 ஆயிரம் அரசு அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 3,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். இந்த நாடாளுமன்றத் தொகுதியில் 2,500 வாக்கு மையங்கள் உள்ளன.
சுமார் 65 சதவீதம் வாக்குச் சாவடிகளில் வெப் காஸ்டிங் சிஸ்டம் வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்காளருக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாக்களிப்பதில் ஏதேனும் குறைபாடு இருந்தால், அவசர எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது நேரடியாக என்னிடம் தெரிவித்தால் உடனடியாகச் சரி செய்து தரப்படும்.
ஒரு சில இடங்களில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாகச் சரி செய்து வருகிறோம். கூட்டமாக இருக்கும் வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கும் இயந்திரங்கள் பழுதாகினால் அத்தகைய வாக்கு மையங்களைக் கணக்கெடுக்கப்பட்டுத் தேர்தல் ஆணையம் அறிவிப்பின் படி, வாக்களிக்கக் கூடுதல் நேரம் வழங்கப்படும் என்றார்.
இதையும் படிங்க:"ஒற்றை வாக்கு என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என யோசிக்காதீர்கள்" : நடிகர் விஷால் ட்வீட்.! - Tamil Nadu Lok Sabha Election 2024