கிருஷ்ணகிரி:கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநில எல்லைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, அணை முழு கொள்ளளவான 44.28 கன அடியில், 42.64 கனஅடி நீர் தேக்கப்பட்டுள்ளது.
கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் அதிகப்படியாக விநாடிக்கு 4 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், ஓசூர் - நந்திமங்கலம் சாலையில் தட்டகானப்பள்ளி அருகே உள்ள ஆற்றின் தரைப்பாலம் நீரில் முழுமையாக மூழ்கி, தரைப்பாலத்தின் மீது 30 அடி உயரத்திற்கு மேலாக ரசாயன நுரைகள் பொங்கிய நிலையில் காட்சியளித்துள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தட்டனப்பள்ளி, நந்திமங்கலம், சித்தனப்பள்ளி, தேவிசெட்டிப்பள்ளி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருப்பதால் 15 கிமீ தூரம் சுற்றி ஓசூருக்கு வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ஒசூர் தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு, தரைப்பாலத்தில் குவியலாக இருந்த ரசாயன நுரைகளை தண்ணீரை பீய்ச்சி அடித்து அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.