வேலூர்: வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் இன்று மாணவர்களுக்கான உயர்கல்வி திட்டம் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமையின் நடைபெற்ற இந்த விழாவில், இஸ்ரோவின் சந்திரயான் 3 திட்ட இயக்குநர் டாக்டர் ப.வீரமுத்துவேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) அதன் தொடர்ச்சியாக இந்த விழாவில், மாணவ, மாணவிகள் விஐடி பல்கலைக்கழகத்தில் இலவசமாக உயர்கல்வி பயில்வதற்கான சேர்க்கை ஆணைகளை சந்திரயான் 3 திட்ட இயக்குநர் டாக்டர் வீரமுத்துவேல், பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் ஆகியோர் இணைந்து வழங்கினர்.
இதனை அடுத்து விழா மேடையில் பேசிய வீரமுத்துவேல், "சந்திரயான் 2க்கு பிறகு பல சவால்களைச் சந்தித்து, சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது. அந்த தோல்விகளில் கற்றுக்கொண்ட பாடத்தினால் தான் சந்திரயான் 3-இன் வெற்றி சாத்தியமானது.
சந்திரயான் 3 முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாகங்கள் ஆகும். சந்திரயான் 3 நிலவில் இறக்கப்படும் பொழுது கடைசி 19 நிமிடங்கள் மிகவும் பரபரப்பாகக் காணப்பட்டது. அந்த 19 நிமிடங்களும் அனைத்து பிரிவுகளிலும் உள்ள விஞ்ஞானிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அப்படி ஒன்றிணைந்து செயல்பட்டதால் தான் வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது. சந்திரயான் 2 தோல்விக்குப் பிறகு பல கட்ட சோதனைகளைச் செய்த பிறகு தான் சந்திரயான் 3 அனுப்பப்பட்டது. ஆனாலும், பல சவால்களைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடின உழைப்பிற்குப் பிறகு அதில் வெற்றி காணப்பட்டது.
பூமியிலிருந்து நிலவை சோதனை செய்யும் பொழுது பல மாற்றங்கள் நிகழும். அவையெல்லாம் கணக்கில் எடுக்கப்பட்டு, பல சோதனைகளை செய்யும் போது ஏற்படும் பல தோல்விகளை எல்லாம் சரி செய்த பிறகுதான் வெற்றி காண முடிந்தது.
அதேபோல் தான் மாணவர்கள், கல்வியில் தோல்வி ஏற்பட்டாலும் ஒழுக்கத்துடனும், விடாமுயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் கடின உழைப்பைச் செலுத்தி செயல்பட்டால் எளிதில் வெற்றி பெற முடியும். ஒழுக்கம் என்பது மாணவர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. தோல்விகளை கண்டு பயப்படாமல் தொடர்ந்து முயற்சிகளை செய்து வெற்றி பெற வேண்டும்" என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க:பேராசிரியர்களை போலி கணக்கு காண்பித்த பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்; அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி!