ராணிப்பேட்டை:அரக்கோணம் அருகே மின்சார ரயிலில் உறங்கிக் கொண்டிருந்த பெண் பயணியிடம் செயின் பறித்த ஆட்டோ ஓட்டுநரை அரக்கோணம் ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவரிடமிருந்து 11 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்துள்ளனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியைச் சேர்ந்தவர் அபிராமி. இவர் திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு, ஆவடியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் செல்வதற்காக நேற்று இரவு 9 மணியளவில் மின்சார ரயிலில் பயணித்துள்ளார். இவர் ரயிலில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், ரயில் அரக்கோணம் அருகில் சிக்னலுக்காக நின்றுள்ளது.
இதனையடுத்து, ரயில் புறப்பட்ட நேரத்தில், ரயிலில் இருந்த மர்ம நபர் அபிராமி கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டு ரயிலில் இருந்து கீழே குதித்து தப்பியுள்ளார். இது குறித்த காட்சிகள் ரயிலில் இருந்த சிசிடிவி கேமாராவில் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் குறித்து, அரக்கோணம் ரயில்வே போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வந்துள்ளனர். இதேபோல், ஆவடியில் இருந்து அரக்கோணம் வந்த மின்சார ரயிலிலும் பார்வதி என்பவரிடம் 4 சவரன் செயின் பறிக்கப்பட்டுள்ளது.