தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை ஐஐடியில் இணையப் பாதுகாப்பு மையம் துவக்கம்

சென்னை ஐஐடி, நாட்டில் புதுமைகளை ஊக்குவிக்கும் அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சியை மேம்படுத்த புதிய இணையப் பாதுகாப்பு மையத்தை தொடங்கியுள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:சென்னை ஐஐடியில் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்கான பாதுகாப்பு, கிரிப்டோகிராபி, குவாண்டம் பாதுகாப்பு, ஐஓடி பாதுகாப்பு ஆகியவற்றில் அதிநவீன தொழில்நுட்பத்திற்கான ஆராய்ச்சியை மேற்கொள்ளும் விதமாக இணையப் பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மைக்கான மையம் (Centre for Cybersecurity, Trust and Reliability – CyStar) துவங்கப்பட்டுள்ளது.

புதிய இணையப் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மைக்கான ஆய்வு மையத்தை சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, மைய ஒருங்கிணைப்பாளர்களான ஸ்வேதா அகர்வால், செஸ்டர் ரெபைரோ, சென்னை ஐஐடி கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை ஆசிரியர் ஜான் அகஸ்டின் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த மையத்தினை துவக்கி வைத்து பேசிய அவர், "இணைய அச்சுறுத்தல்கள் பண ஆதாயத்திற்காக மட்டுமின்றி முக்கிய உள்கட்டமைப்புகளும், திட்டமிட்ட தாக்குதல்களுக்கும் ஆளாகின்றன. தேசத்தின் பாதுகாப்பிற்காக இணையப் பாதுகாப்பு வழிமுறைகளுக்கான செயலில் இறங்குவது மிகவும் முக்கியம்.

இந்த சூழலில் இத்தகைய முயற்சிகள் மிகமிக அவசியமாகும். உலகளவிலும் உள்நாட்டிலும் கல்வி, தொழில் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்தி தற்போதைக்கும், எதிர்காலத்திற்கும் சிக்கலான பாதுகாப்பு சவால்களை சமாளிக்க தேவையான நிபுணத்துவத்துடன் மாணவர்கள், வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை இந்த மையம் தயார்படுத்துகிறது.

இதனால் பாதுகாப்பான டிஜிட்டல் உலகத்திற்கு பங்களிப்பை வழங்க முடியும். அத்துடன் நிதி, சுகாதாரம், மோட்டார் வாகனங்கள், மின்னணுத் தொழில்நுட்பம் போன்ற தொழில்களில் முக்கியமான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் விரிவாக கவனம் செலுத்தப்படும்.

சைஸ்டாரின் முக்கிய ஆராய்ச்சியில், தொழில் மற்றும் அரசுத் துறைகளான மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், கல்வி அமைச்சகம், விடெஸ்கோ டெக்னாலஜிஸ், காஸ்பஸ்கி, ஐடிபிஐ வங்கி, எல்ஜி இந்தியா, சப்தாங் லேப்ஸ், அல்கோரண்ட், இந்தோ- பிரெஞ்ச் மேம்பட்ட ஆராய்ச்சிக்கான ஊக்குவிப்பு மையம், தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு செயலகம் போன்றவை இடம்பெற்றுள்ளன" என தெரிவித்தார்.

இதையும் படிங்க :கண் சிகிச்சையில் புதிய தொழில்நுட்பம்; சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!

மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஸ்வேதா அகர்வால், "இணையப் பாதுகாப்பின் சிக்கல்களை ஆய்வு செய்ய பல்வேறு நிபுணத்துவம் கொண்டவர்களை இந்த மையம் ஒன்றிணைக்கும். எங்கள் அணுகுமுறை பன்முகத்தன்மை கொண்டதாகும். அடிப்படை ஆராய்ச்சி முதல் அன்றாட பயன்பாடுகள் வரை ஸ்டார்ட்-அப்களை ஊக்குவிப்பது வரையிலான பங்களிப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறோம்.

செயற்கை நுண்ணறிவு, குவாண்டமிற்கு பிந்தைய காலகட்டங்களில் வளரக்கூடிய இணையப் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ஒருங்கிணைந்த பன்முக உத்தியை சென்னை ஐஐடி சைஸ்டார் உருவாக்கும். தேசிய உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதில் இந்த அணுகுமுறை முக்கியமானதாகும். அத்துடன் தொழில்நுட்ப அச்சுறுத்தல்களுக்கு எதிராக முழுமையான பாதுகாப்பையும் வழங்கும்.

அறிவுசார்ந்த மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க சைஸ்டார் விரும்புகிறது. தொழில்துறை தலைவர்கள், அறிஞர்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் அதிநவீன தொழில்நுட்பத்துடன் ஒன்றிணைந்து செயல்படும்போது கிடைக்கும் முன்னேற்றங்களை இணையப் பாதுகாப்புத் துறையில் அன்றாடப் பயன்பாட்டுத் தயாரிப்புகளாகவோ, சேவைகளாகவோ பயன்படுத்த முடியும்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details