சென்னை:ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளைப் பார்வையில் மத்திய குழு இன்று தமிழ்நாடு வருகிறது. தொடர்ந்து நாளை முதல் இந்த 8 பேர் கொண்ட குழு, தனித்தனியாகப் பிரிந்து புயல் பாதித்தப் பகுதிகளை ஆய்வு செய்கிறது.
ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை தமிழ்நாடு முழுவதும் கடந்த வாரம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள புயல் மழை வெள்ள சேதங்களை ஆய்வு செய்து மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதற்காக மத்திய குழுவை தமிழ்நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு கோரிக்கை விடுத்தார்.
மேலும், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு எம்பிக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்தநிலையில் மத்திய அரசு தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள புயல் மழை வெள்ளச் சேதம் குறித்து ஆய்வு செய்வதற்காக 8 பேர் கொண்ட மத்திய குழுவை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்தது.
அதன்படி மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் இன்று சென்னை வந்துள்ளனர். மத்திய குழுவின் தலைவரான உள்துறை இணைச் செயலாளர் ராஜேஷ் குப்தா உட்பட 3 பேர் மாலை 4.20 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் டெல்லியில் இருந்து சென்னை வருகின்றனர்.
மேலும், குழுவில் உள்ள மற்றொருவர் இன்று காலை 11.30 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்துள்ளார். குழுவின் மற்றொரு உறுப்பினர் இன்று மாலை 3.05 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் ஹைதரபாத்தில் இருந்து சென்னை வருகிறார்.
இந்த குழுவில் இடம் பெற்றுள்ள மூன்று மத்திய அரசு அலுவலர்கள் சென்னையில் பணியில் உள்ளனர். அவர்கள் மூவரும் இந்தக் குழுவில் இணைந்து கொள்கின்றனர்.
இந்த 8 பேர் கொண்ட குழுவினர் இன்று மாலை தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தி விட்டு, நாளை காலை முதல் தனித்தனி குழுக்களாக பிரிந்து, ஆய்வுப் பணிகளை மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.