சென்னை: கடந்த பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி, டெல்லியில் விலை உயர்ந்த 50 கிலோ போதைப்பொருள் கடத்திய விவகாரத்தில் சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிஃபர் ரகுமான் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய மூவரும் மத்தியப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, கைது செய்யப்பட்ட மூவரிடமும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியது. அதன் அடிப்படையில், கடந்த மூன்று ஆண்டுகளாகச் சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களைத் தேங்காய் பவுடர்கள் ஏற்றுமதி எனக் கூறிக் கடத்தியது தெரியவந்தது.
மேலும், இந்தப் போதைப்பொருள் கடத்தலில் முக்கிய நபராகச் செயல்பட்டது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும், திமுகவின் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் என்பதும், அவரின் சகோதரர்களான மொய்தீன் மற்றும் சலீம் ஆகியோருடன் இணைந்தே ஜாபர் சாதிக் போதைப்பொருட்களைத் தொடர்ந்து கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதனை அடுத்து, மத்தியப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், சென்னை மண்டலப் போதை தடுப்புப் பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து விசாரணையை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், ஜாபர் சாதிக் தலைமறைவான காரணத்தால், அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி, அவரின் வீட்டில் சம்மன் ஒன்றை ஒட்டிச் சென்று இருந்தனர்.