மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி திருப்பூர்: பல்லடம் மாதப்பூர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை மேற்கொண்டு வந்த 'என் மண் என் மக்கள்' யாத்திரை நிறைவு விழா, இன்று (பிப்.27) நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளார்.
இதற்கான பணிகள் பல்லடம் மாதப்பூர் பகுதியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இக்கூட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவதை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், "திருப்பூரில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் 'என் மண் என் மக்கள்' யாத்திரை நிறைவு விழா, மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப்பட உள்ளது. இதுவரை தமிழகத்தில் எந்த ஓர் அரசியல் கட்சியும் நிகழ்த்தாத நிகழ்வாக இந்த நிறைவு விழா அமையும். 'என் மண் என் மக்கள்' யாத்திரை செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் மிகப்பெரிய உற்சாகத்தை தந்துள்ளனர்.
பாஜக 20 ஆண்டுகளுக்குப் பிறகு, நான்கு சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றதுபோல, 'என் மண் என் மக்கள்' யாத்திரைக்குப் பிறகு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 நாடாளுமன்றத் தொகுதிகளையும் வெல்வோம்' என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 'இந்தியாவில், 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியமைப்பது உறுதி. திமுக ஆட்சியில் ஏற்கெனவே, ஓர் அமைச்சர் சிறையில் உள்ளார். ஒருவர் பதவி இழந்துள்ளார். இன்னொருவர் மீது நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் ஊழல் வழக்குகளைப் பட்டியலிட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாஜக எந்தக் கட்சியையும் உடைக்கவில்லை. பிரதமர் மோடி வேகமாக நாட்டை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்று கொண்டிருக்கிறார். இதனை மக்களும், பிற அரசியல் கட்சியினரும் பார்த்துக் கொண்டுள்ளார்கள். இதனால், அவர்கள் பிரதமருக்கு ஆதரவு அளிக்கின்றனர்" எனக் கூறினார்.
இதனைத்தொடர்ந்து, தமிழக பாஜக மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி பேசியதாவது, ' 'என் மண் என் மக்கள்' யாத்திரையின் நிறைவு விழா வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழகத்தில் ஊழல் நிறைந்த ஆட்சிக்கு எதிராக பாஜக செயல்பட்டு வருகிறது. இதனால், ஊழல் நிறைந்த திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு இது வெறுப்பை ஏற்படுத்தும்' என்று தெரிவித்தார்.
இதனிடையே, பிரதமர் மோடியின் வருகையையொட்டி, திருப்பூர் மாவட்ட காவல் காண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா அப்பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். அதேபோல, சூலூர்-பல்லடம் மார்க்கத்தில் செல்லும் வாகனங்கள் பலத்த சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன. மோடியின் வருகையையொட்டி, அப்பகுதியில் கோவை மாவட்ட போலீசாரும் திருப்பூர் மாவட்ட போலீசாருடன் இணைந்து பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான முறைகேடு வழக்கு: உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும்.. வழக்கின் பின்னணியும்!