சென்னை: சென்னையிலிருந்து நாகர்கோவில் செல்லும் புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க நிகழ்வு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தெலங்கனா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மேடையில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், "ரயில்வே துறையில் கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பெரிய வரலாற்று புரட்சி ஏற்பட்டுள்ளது. ரயில்வே துறையில் மட்டுமே இன்று அதிநவீன ரயில் போக்குவரத்தை நாம் பார்க்க முடியும். முன்பெல்லாம் புல்லட் ரயிலை சினிமா மற்றும் பேப்பரில் மட்டும் தான் பார்ப்போம். இன்று பிரதமர் மோடியின் முயற்சியால் தான் வந்தே பாரத் ரயில் கொண்டு வரப்பட்டுள்ளது.
சொந்த நாட்டில், சொந்த முயற்சியில், சொந்த தொழில்நுட்பம் குறிப்பாக சென்னையில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவில் மற்ற மாநிலங்கள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது அனைத்தும் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் தான். வந்தே பாரத் ரயிலானது மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் பயன்பெறும் விதமாக உள்ளது. அதுமட்டுமின்றி, சென்னையை மையமாக வைத்து இயக்கப்படுகிறது.
காலையில் சென்னையில் கிளம்பினால் மதியம் கோவை சென்றுவிடலாம். மதியம் கோவையில் இருந்து புறப்பட்டால் இரவு சென்னை வந்துவிடலாம். இப்படிப்பட்ட சிறப்பான ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடுத்துள்ளார்.
ரயில்வே அமைச்சருக்கு இதற்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து ரயில்வே தொடர்பாக எந்த திட்டம் போனாலும், அதற்கு உடனடியாக ரயில்வே துறை அமைச்சர் ஒப்புதல் அளிக்கிறார். தற்போதைய பட்ஜெட்டில் கூட ரூ.6,000 கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்வேயின் வளர்ச்சி மிக அபரிதமான வளர்ச்சி.
3வது முறையாக பிரதமர் அவர்கள் தொடர்ந்து ஆட்சி அமைத்து வருகிறார்கள். வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆட்சியில் தமிழகத்தின் ரயில்வே திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தான் ரயில்வேயின் செயல்பாடாக இருக்கிறது.