சென்னை : சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் பல்கலைக்கழகத்தில் 33வது ஆண்டு பட்டமளிப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் பொறியியல், தொழில்நுட்பம், மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர் துறை, உணவு, சமையல், கலை மற்றும் கலை அறிவியல் உள்ளிட்ட கல்வித்துறையைச் சேர்ந்த சுமார் 4,000 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மத்திய மீன்வள மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ஜார்ஜ் குரியன் மற்றும் ஏசிஎஸ் கல்லூரி நிறுவன தலைவர் ஏசி சண்முகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இது தவிர மாணவர்களின் பெற்றோர்களும் பங்கேற்றனர். பெற்றோர்களின் முன்னிலையில் மாணவர்களும், மாணவிகளும் நெகிழ்ச்சியுடன் பட்டங்களை பெற்று சென்றனர்.
விழா மேடையில் பேசிய அமைச்சர், "நீங்கள் தான் இந்தியாவின் எதிர்காலம். 2047ம் ஆண்டு நாம் நூறாவது சுதந்திர தினத்தை கொண்டாடுவோம். அப்போது உங்கள் வயதை கணக்கிட்டு கொள்ளுங்கள். உங்களுக்கு கல்யாணம் ஆகி குழந்தைகள் இருப்பார்கள். அப்போது நீங்கள் இந்தியாவின் எதிர்கால தலைவராக இருந்து நாட்டை வழிநடத்திக் கொண்டிருப்பீர்கள். அப்போதும் உங்களுக்கு நமது கலாச்சாரத்தை பற்றிய எண்ணம் இருக்க வேண்டும்.
இதையும் படிங்க :"இரண்டாண்டுகளாக ஆர்டிஇ பள்ளிக் கட்டணம் வழங்கப்படவில்லை"- அரசுக்கு தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை!
அதே சமயம் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணிபுரிய வேண்டும். ஒன்றிணைந்து சிந்திக்க, ஒன்றிணைந்து நம் நாட்டை முன்னேற்றம் அடைய செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கூறுகிறார். அப்படி செய்தால் உங்களது வருமானம் உயரும். உங்கள் குடும்பத்தின் வருமானம் உயரும். அதன் மூலம் நம் நாட்டின் வருமானம் உயரும். உங்களை எது தூங்க விடவில்லையோ அது தான் உங்கள் கனவு என மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார். உங்கள் கனவை நோக்கி பயணியுங்கள்" என தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புதிய கல்விக் கொள்கையில் பிரச்சனை உள்ளது என்ற மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் கல்வியை விட மேம்பட்ட கல்வியை பிரதமர் மோடி நமக்கு வழங்குகிறார். அதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும்.
இந்தியா இலங்கை இரண்டுமே நட்பு நாடுகள். எனவே இந்திய இலங்கை அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணப்படும். கடல் எல்லை பிரச்சனை குறித்து தமிழக மீனவர்கள் கவலைப்பட வேண்டாம். அதை இந்திய அரசாங்கம் பார்த்துக் கொள்ளும். தமிழக மீனவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நாங்கள் கேட்டு அறிந்துள்ளோம். விரைவில் அவற்றுக்கு தீர்வு காண்போம்" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்