பெட்ரோல் குண்டு தயாரிக்கும் சிசிடிவி வீடியோ (Credits - ETV Bharat TamilNadu) சேலம்: சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த தீவட்டிப்பட்டி பகுதியில் பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து, திருவிழா பாதியில் நிறுத்தப்பட்டது. அதன்பின், ஓமலூர் வட்டாட்சியர், ஓமலூர் டிஎஸ்பி தலைமையில் இரு தரப்பினரையும் வரவழைத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதில் ஒரு தரப்பினர் மாரியம்மன் கோயிலில் சாமி கும்பிடுவதற்கும், தேர் இழுப்பதற்கு எங்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பின்னர், கோயிலிலிருந்து வெளியேறிய இருதரப்பினரும், சேலம் - பெங்களூரு நெடுஞ்சாலை பகுதியில் மோதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் மாறி, மாறி கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
மோதலின் உச்சக்கட்டமாக, நெடுஞ்சாலை ஓரமாக இருக்கும் 5க்கும் மேற்பட்ட கடைகள் தீவைத்து கொளுத்தப்பட்டது. இந்த மோதலால், சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வாகனங்கள் மாற்றுப் பாதையில் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த நிலையில், போலீசார் கலவரத்தில் ஈடுபட்டவர்களை அமைதியாக வெளியேறும்படி தொடர்ந்து கூறி வந்தனர். ஆனால், ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொண்டதால் தடியடி நடத்தி போலீசார் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதனைத் தொடர்ந்து, கடந்த மூன்று நாட்களாக அந்தப் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, கலவரத்தில் ஈடுபட்டவர்களில் 31 பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இரு தரப்பினரும் அப்பாவி மக்களைக் கைது செய்து விட்டதாகக் கூறி அவர்களை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும், கலவரம் நடந்த பகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள் நேரில் பார்வையிட்டு, பொதுமக்களிடம் உண்மை நிலையைக் கேட்டறிந்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களை சிசிடிவி காட்சிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோ காட்சிகளைக் கொண்டு போலீசார் அடையாளம் கண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான், இந்தக் கலவரத்தில் இளைஞர்கள் சிலர், ஒரு கடை முன்பு நிறுத்தப்பட்டு இருக்கும் இருசக்கர வாகனத்திலிருந்து பெட்ரோலை திருட்டுத்தனமாக எடுத்து, பாட்டிலில் நிரப்பி பெட்ரோல் குண்டு தயாரித்து, அதனை கடைகள் மீது வீசும் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளது.
அந்த சிசிடிவி காட்சியில், போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போதே, இருசக்கர வாகனத்திலிருந்து பெட்ரோலை எடுத்து, பெட்ரோல் குண்டு தயாரிக்கும் வேலையில் இளைஞர்கள் ஈடுபடும் காட்சி பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தேனியில் நாட்டு வெடிகுண்டுகளுடன் நான்கு பேர் கைது! - Theni Country Bomb Issue