சென்னை: சென்னை, ஆவடியைச் சேர்ந்தவர் பவித்ரா (24). இவர் போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், பவித்ரா எப்போதும் போல இன்று (ஜூலை 17) காவல் நிலையத்தில் பணியை முடித்துவிட்டு ஆவடியில் உள்ள அவரது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் அயப்பாக்கம் திருவேற்காடு சாலை வழியாகச் சென்றுள்ளார்.
அப்போது, சரியாக அயப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது வளைவில் எதிரே வேகமாக வந்த வெள்ளை நிற கார் ஒன்று மோதியதில், காவலர் பவித்ரா அருகே இருந்த முள்வேலியில் இருசக்கர வாகனத்துடன் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, விபத்து ஏற்படுத்திய கார், காவலர் பவித்ராவின் பின்னால் வந்த மற்றொரு கார் மற்றும் கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த சரக்கு வாகனத்தின் மீது மோதி நின்றுள்ளது.
இதனை அடுத்து, அப்பகுதியில் உள்ளவர்கள் இந்த விபத்து குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இந்த நிலையில், கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் விபத்து நடந்த இடத்திற்கு வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண் காவலர் பவித்ராவை மீட்டு சிகிச்சைக்காக ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதன் பின்னர், மேல் சிகிச்சைக்காக காயமடைந்த காவலர் பவித்ரா, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.