சென்னை:சென்னை கோயம்பேடு பகுதியில் அங்காடி நிர்வாக குழுவிற்கு சொந்தமான வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தனியார் ஆம்னி பஸ், ஆட்டோ, வேன், கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் நேற்று மாலை திடீரென ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்து அதன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏழு ஆட்டோக்கள், வேன், கார் என அனைத்து வாகனங்களுக்கும் தீ வேகமாக பரவியது.
இதனால் அனைத்து வாகனங்களும் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தன. இதையடுத்து அங்கிருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். கோயம்பேடு ஜெ.ஜெ.நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் இருந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.பின்னர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.