ஈரோடு:நேற்று (பிப்.26) இரவு போட்டோ ஸ்டுடியோ ஒன்றிற்குள் புகுந்த இரு மர்ம நபர்கள் கடைக்குள் இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களைச் சாவகாசமாகப் பேசிக்கொண்டே திருடிச் சென்றுள்ள சிசிடிவி காட்சி ஆடியோவுடன் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்கள் அடுத்தடுத்து வணிக நிறுவனங்களிலும் கொள்ளையடிக்க முயன்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஈரோடு மாவட்டம், மூலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன். புகைப்படக் கலைஞரான இவர் கரூர் செல்லும் சாலையில் ஸ்டுடியோ ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு வழக்கம் போலக் கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். மீண்டும் இன்று காலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காகக் கடையில் இருந்த பொருட்களை எடுக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது கடையில் வைக்கப்பட்டிருந்த கேமரா, மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது.