கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் தற்போது 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் இரவு நேரங்களில் மருதமலை, ஐ.ஓ.பி காலனி, பாரதியார் பல்கலைக்கழக வளாக பகுதிகளில் சுற்றி வருகின்றன.
மேலும், சோமையம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் வனப்பகுதியை ஒட்டி திறந்த வெளி குப்பை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளதால், இரவு நேரங்களில் அங்கு வரும் யானைகள் குப்பையில் உணவு தேடுவது வழக்கம். அந்த வகையில், சனிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் மருதமலை வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, லெப்ரஸி காலனி வழியாக வந்துள்ளது.
அப்போது அந்த பகுதியை சார்ந்த சிவசுப்பிரமணியம் என்ற முதியவர் சாலையில் நடந்து வந்த போது, திடீரென எதிரே யானை வந்துள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முதியவர், பயத்தில் ஓட முயன்றுள்ளார். அவரை தடுத்த யானை, தள்ளிவிட்டும், காலால் உதைத்து விட்டும் சென்றது.