ஜெயக்குமார் கடைக்கு செல்லும் சிசிடிவி காட்சிகள் (Video credits - ETV Bharat Tamil Nadu) திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த கரைச்சுத்துபுதூரைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், கடந்த ஐந்து நாட்களாகத் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.
ஜெயக்குமார் காணாமல் போனதாகக் கூறப்பட்ட நிலையில், அவருடைய தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனிடையே, அவர் எழுதிய கடிதங்களில் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள், தொழிலதிபர்கள் பலர் பெயரைக் குறிப்பிட்டு அவர்களால் தனக்கு ஆபத்து இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
அதன் பின்னர் ஜெயக்குமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாகக் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை போலீசார், ஜெயக்குமாரின் சொந்த ஊரான கரைச்சுத்துபுதூரில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:கராத்தேவில் பிளாக் பெல்ட்.. நெல்லை ஜெயக்குமார் பற்றி வெளியான ரகசியம்!
முன்னதாக, ஜெயக்குமார் காணாமல் போனதாகக் கூறப்படும் 2ஆம் தேதி இரவு 10:30 மணி அளவில், அவர் கரைச்சுத்துபுதூரில் உள்ள கடையில் பொருட்கள் வாங்கச் செல்லும் சிசிடிவி காட்சி ஒன்று வெளியானது. பின்னர் அங்கிருந்து, இரவு 10:45 மணிக்கு ஜெயக்குமாரின் கார் அவரது வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர் வீட்டிற்குள் சென்றாரா அல்லது அங்கிருந்து காணாமல் போனாரா என்பது தற்போது வரை கேள்விக்குறியாக உள்ளது. இதனிடையே, ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த நபர்களுக்கு சம்மன் அனுப்பி, அவர்களை நேரில் வரவழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், ஜெயக்குமாரின் இரண்டு மகன்கள் இடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ஜெயக்குமார் காணாமல் போனதாகக் கூறப்படும் மே 2ஆம் தேதி இரவு, அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் டார்ச் லைட் வாங்கும் புதிய சிசிடிவி காட்சி ஒன்று தற்போது வெளியாகிப் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே, மறைந்த ஜெயக்குமாருக்கு இளம்பெண் ஒருவருடன் தொடர்பு இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, அந்த பெண்ணை அவரது காரில் அழைத்துச் சென்றாரா என்ற சந்தேகித்த போலீசார், அப்பெண்ணை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:பெண்ணுடன் ரகசிய பேச்சு? 'மும்பை போன் கால்'.. ஜெயக்குமார் வழக்கில் பகீர் திருப்பம்