சென்னை: தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக உள்ள ஆம்ஸ்ட்ராங் நேற்று மர்ம நபர்களால் (ஜூலை 5) படுகொலை செய்யப்பட்டார். பெரம்பூரில் உள்ள தனது வீட்டருகே நேற்றிரவு நின்று தனது ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை பட்டாக் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
அப்போது அந்த கும்பலைத் தடுக்க முயன்ற அவரது ஆதரவாளர்களையும் வெட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான சிசிடிவி வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu) இதனைத்தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் உடல் உடற்கூறாய்விற்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சென்னை போலீசார் 8 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை வலைவீசித் தேடிவந்த நிலையில், 8 பேர் போலீசாரிடம் சரணடைந்துள்ளனர். அவர்களை கைது செய்த போலீசார் இக்கொலை சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து இன்று ஆம்ஸ்ட்ராங் உடற்கூராய்வு முடிவடைந்த நிலையில் அவரது உறவினர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவாளர்கள் உடலை வாங்க மறுத்தும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்பு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் செல்லும் பிரதான சாலை முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பிஎஸ்பி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் கைது.. ஆணையர் அஸ்ரா கார்க் தகவல்! - BSP TN Unit President Murder