தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குட்கா முறைகேடு வழக்கு; சிபிஐ அதிகாரி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

Gutka Scam: குட்கா முறைகேடு தொடர்பாக வழக்கை விசாரித்து வரும் சிபிஐ விசாரணை அதிகாரி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 6, 2024, 4:05 PM IST

சென்னை:கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை செங்குன்றம் பகுதியில் ஒரு குட்கா கிடங்கில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டபோது கிடைத்த டைரியில், குட்கா பொருட்களை கிடங்கில் வைத்து விற்பனை செய்வதற்கு அமைச்சர்கள், அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கப்பட்டதாக டெல்லி சிபிஐ, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி, மத்திய கலால்துறை அதிகாரி, சுகாதாரத்துறை அதிகாரி உள்பட 6 பேருக்கு எதிராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் டிஜிபி, சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள் மீது 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகை முழுமையாக இல்லை என்பதால், பிழையை சரி செய்ய சிபிஐயிடம் நீதிமன்றம் திரும்ப அளித்தது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைக்கு நடத்த, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இந்த நிலையில், இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன் இன்று (மார்ச் 6) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் குற்றபத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு எதிரான நீதிமன்ற விசாரணைக்கு இன்னும் ஒப்புதல் கடிதம் கிடைக்கவில்லை என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதே காரணத்தை தொடர்ந்து பல முறை கூறி வருவதாக சிபிஐக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணையின் நிலை என்ன என்பது குறித்து மார்ச் 21ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, சிபிஐ விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.

இதையும் படிங்க:சீமான் தாக்கல் செய்த வழக்கு; நடிகை விஜயலட்சுமி ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details