சென்னை: தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கப்படுவதாக எழுந்த புகார் வழக்கை டெல்லி சிபிஐ காவல்துறை விசாரித்து வருகிறது. இதில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ, இவர்களுக்கு எதிராக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் டிஜிபி, சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகரிகளுக்கு எதிராக கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகை முழுமையாக இல்லை என்பதால், பிழையை சரி செய்து விசாரணை அனுமதிக்கான ஒப்புதல் ஆவணங்களுடன் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர், பிழைகளை திருத்தம் செய்து கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், ஏற்கனவே உள்ள ஆறு பேருடன் புதிதாக மத்திய, மாநில அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பெயர்களை இணைத்து தாக்கல் செய்தது.
அதில் ஆர்.சேஷாத்ரி, குல்சார் பேகம், அனீஷ் உபாத்யாய், வி.ராமநாதன், ஜோஸ் தாமஸ், பி.செந்தில்வேலவன் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா என்ற பி.வெங்கடரமணா, வி.எஸ்.கிருஞ்சிச்செல்வன், எஸ்.கணேசன், முன்னாள் அமைச்சர் டாக்டர். சி.விஜயபாஸ்கர், அ.சரவணன், டாக்டர்.லக்ஷ்மி நாராயணன், பி.முருகன், சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ், தமிழ்நாடு அரசின் முன்னாள் காவல்துறை தலைவர் (டிஜிபி) டி.கே.ராஜேந்திரன், வி.கார்த்திகேயன், ஆர்.மன்னரமணன், வி.சம்பத், ஏ.மனோகர், அ.பழனி, கே.ஆர்.ராஜேந்திரன் ஆகிய 21 பேர் மீது குற்றப்பத்திரிகையில் கூடுதலாக குற்றம் சாட்டப்பட்டது.