புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், சங்கன்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவாண்டான் தெருவில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டதாக கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட குடிநீர் தொட்டியில் தண்ணீர் மாதிரியை சேகரித்த ஊரக வளர்ச்சித் துறை அதனை திருச்சியில் உள்ள குடிநீர் பகுப்பாய்வு மையத்திற்கு சோதனைக்காக அனுப்பினர்.
அதில் நீண்ட நாட்களாக குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படாததால் உருவான பாசிதான் பச்சை நிறத்தில் படர்ந்திருக்கலாம் என தெரிய வந்தது. மேலும், பரிசோதனையின் முடிவுகளில், அந்த குடிநீரில் மாட்டுச்சாணம் உள்ளிட்ட எந்தவித கிருமிகளும் கலக்கப்படவில்லை எனவும், அந்த நீர் குடிக்க உகந்த நீர் எனவும் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி பரிசோதனை முடிவுகள் வெளிவந்தன.
இதனால் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டதாக நிலவி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இருந்த போதிலும், இந்த விவகாரத்தில் காவல்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் முறையான விசாரணையை மேற்கொள்ளவில்லை என்றும், ஒரு தலைபட்சமாக விசாரித்துள்ளனர் என்றும், இந்த வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும் எனவும் கடுக்காகாடு கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றியும், இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து ஜூன் 4-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் கடந்த மே 15ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.