சென்னை: வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்த சிவக்குமார் என்பவர் வேலூர் சரக சிறைத்துறை டிஐஜியான ராஜலட்சுமியின் வீட்டில் கடந்த சில மாதங்களாக வேலை செய்து வந்துள்ளார். இந் நிலையில், அவர் டிஐஜி வீட்டில் இருந்து ரூ.4.25 லட்சம் பணத்தை திருடியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, சிவக்குமாரை தனிச் சிறையில் அடைத்து சித்ரவதை செய்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புகழேந்தி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்படி, சிபிசிஐடி போலீசார் வேலூர் சரக சிறைத்துறை டிஐஜியான ராஜலட்சுமி உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆயுள் தண்டனை சிறைக் கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்தி தாக்கிய விவகாரத்தில், டிஐஜி ராஜலட்சுமியிடம் சிபிசிஐடி எஸ்.பி.வினோத் சாந்தாராம் தலைமையிலான போலீசார் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டனர். சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணை நடைபெற்றதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.