திருநெல்வேலி: காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சிபிசிஐடி போலீசார், ஜெயக்குமார் உடல் கைப்பற்றப்பட்ட கரைசுத்துபுதூர் பகுதிக்கு நேரில் சென்று பல கட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர்.
முன்னதாக, சிபிசிஐடி எஸ்பி முத்தரசி ஏற்கனவே சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, ஜெயக்குமார் குடும்பத்தினர் நெல்லை சிபிசிஐடி அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு, அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிபிசிஐடி எஸ்பி முத்தரசி இன்று (வியாழக்கிழமை) நெல்லைக்கு வந்தார். பின்னர், பாளையங்கோட்டை சிபிசிஐடி அலுவலகத்தில் ஜெயக்குமார் வழக்கு தொடர்பாக விசாரணை அதிகாரி ஆய்வாளர் உலக ராணி உள்ளிட்ட காவல்துறையினரிடம் ஆலோசனை மேற்கொண்டார்.