புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி. இவர் கடந்த 17ம் தேதி, தமது வீட்டின் அருகே உள்ள பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்றுவிட்டு டூ வீலரில் வீடு திரும்பியுள்ளார். அப்போது எதிரே வந்த மினி டிப்பர் லாரி மோதியதில் ஜகபர் அலி உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த திருமயம் காவல்துறையினர் ஜகபர் அலி உடலை மீட்டு திருமயம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். அங்கு வந்த ஜகபர் அலியின் உறவினர்கள் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றம்சாட்டினர். மேலும் அவர்கள், திருமயம் சுற்றுவட்டார பகுதியில் சட்டவிரோதமாக இயங்கும் குவாரிகளுக்கு எதிராக கபர் அலி வழக்கு தொடர்ந்துள்ளார்.
கனிமவள கொள்ளையை தடுக்க தொடர்ந்து போராடி வந்த இவரை திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம். எனவே காவல்துறையினர் உரிய முறையில் விசாரணை நடத்தி தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும், இதுகுறித்து திருமயம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் திட்டமிட்டு ஜகபர் அலியை விபத்தை ஏற்படுத்தி படுகொலை செய்ததாக தெரிய வந்தது