தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹாங்காங் டூ சென்னை: 4 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தொடங்கிய விமான சேவை..!

ஹாங்காங் - சென்னை - ஹாங்காங் இடையே கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் பயணிகள் விமான சேவை 4 ஆண்டுகளுக்கு பின்பு, இன்று மீண்டும் தொடங்கியது.

ஹாங்காங் டூ சென்னை
Hong Kong to Chennai Flight

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 3, 2024, 9:17 AM IST

சென்னை:4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்பு, ஹாங்காங் - சென்னை - ஹாங்காங் இடையே கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் பயணிகள் விமான சேவை இன்று (பிப்.3) மீண்டும் தொடங்கப்பட்டது.

ஹாங்காங் - சென்னை - ஹாங்காங் இடையே ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த, கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறுத்தப்பட்டது. அந்த விமானம் சென்னையில் இருந்து ஜப்பான், பிலிப்பைன்ஸ், தென்கொரியா நாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு இணைப்பு விமானமாகவும், தொழில்துறையினர் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் வசதியான விமானமாகவும் இருந்தது.

எனவே நிறுத்தப்பட்டுள்ள விமானத்தை மீண்டும் இயக்க வேண்டும் எனப் பெரும்பாலான பயணிகள் தரப்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன. இதையடுத்து கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், மீண்டும் விமான சேவையை தொடங்க முன் வந்தது. இதன்படி வாரத்தில் புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள், இந்த விமானங்கள் இயக்கப்படடும் என்று கடந்த செப்டம்பர் மாதம் அந்த நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது.

அதைபோல, 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்பு ஹாங்காங்கிலிருந்து முதல் விமானம், இன்று அதிகாலை ஒரு மணிக்கு, 103 பயணிகளுடன், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. முதல் விமானத்தில் வந்த அந்தப் பயணிகளை, சென்னை விமான நிலையத்தில், விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றனர். அதன்பின்பு அந்த விமானம் 129 பயணிகளுடன், சென்னையில் இருந்து ஹாங்காங்கிற்கு இன்று அதிகாலை 2.20 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.

இந்த விமானம் அதிக விரைவில் தினசரி விமானமாக, வாரத்தில் ஏழு நாட்களும் இயக்கப்பட இருப்பதாகவும், இந்த விமான சேவை, 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்பு, மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் தொழில், வர்த்தகத்துறையினர் மிகுந்த பயனடைவார்கள் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: “தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றல்” - நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இடங்களில் நடத்தப்பட்ட சோதனைக்கு என்ஐஏ விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details