சென்னை: தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த 27-ம் தேதி இரவு அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காச் சென்றார். இந்தப் பயணத்தில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அதேபோல, கூகுள், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற பல்வேறு நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் AI தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.
இதுமட்டும் அல்லாது, ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.
அதேபோல, மின்னணு உபகரணங்களை விநியோகம் செய்யும் ஜேபில் (JABIL) நிறுவனம், ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனம் மற்றும் ஆட்டோ டெஸ்க் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதுமட்டும் அல்லாது, தமிழகத்தில் மீண்டும் ஃபோர்டு (Ford) கார் நிறுவனத்தின் உற்பத்தியை தொடங்குவது பற்றி ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனத்தின் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று (செப்.11) அமெரிக்க நாட்டின் சிகாகோவில், பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாக உள்ள கேட்டர்பில்லர் (Caterpillar Inc) நிறுவனத்துடன் ரூ.500 கோடி முதலீட்டில், திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அந்நிறுவனத்தின் தற்போதுள்ள கட்டுமான கருவிகள் உற்பத்தி நிலையங்களை விரிவுபடுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கேட்டர்பில்லர் நிறுவனம் கட்டுமான தொழில்கள், எரிசக்தி மற்றும் போக்குவரத்து, நிதி தயாரிப்பு பொருட்கள் ஆகிய நான்கு வணிகப் பிரிவுகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. மேலும், டிராக்டர்கள் முதல் ஹைட்ராலிக் அகழ்வாராய்ச்சிகள், பேக்ஹோ ஏற்றிகள், மோட்டார் கிரேடர்கள், ஆஃப்-ஹைவே டிரக்குகள், வீல் லோடர்கள், விவசாய டிராக்டர்கள் மற்றும் என்ஜின்கள் ஆகியவற்றின் இயந்திரங்களை தயாரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.