தூத்துக்குடி: தூத்துக்குடி கற்குவேல் அய்யனார் கோயிலில் பரம்பரை பட்டறைக் காரர்களின் பூஜைக்கு இந்து சமய அறநிலையத்துறை மறுப்பு தெரிவித்த நிலையில் மாவட்ட நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி அந்த சமுதாயத்தினர் நேற்று(டிச.4) இரவு திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா, காயாமொழியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் குதிரைமொழி தேரிக்குடியிருப்பு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தென் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கற்குவேல் அய்யனார் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் நடைபெறக்கூடிய 'கள்ளர் வெட்டு திருவிழா' மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்வாகும்.
இந்த கள்ளர் வீட்டு திருவிழாவானது கார்த்திகை மாதம் 30 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில் மாத இறுதி நாளன்று செம்மனல் தேரிக்காடு பகுதியில் கள்ளர் வெட்டு நிகழ்வு நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த கோயிலில் பரம்பரை பட்டறைக் காரர்களான ஓர் சமுதாயத்தினர் சார்ந்தவர்கள் காலம் காலமாக பூஜை, புனஸ்க்காரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு திருவிழா தொடக்கத்தில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பரம்பரை பட்டறைக்காரர்களை பூஜை செய்யக்கூடாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பேசிய பரம்பரை பட்டறைக்காரர்களுள் ஒருவரான சங்கரலிங்கம், “காலம், காலமாக எங்கள் எங்கள் சமுதாயத்தினர் கோயிலுக்கு பூஜை செய்து வந்தோம். ஆனால், திடீரென இந்து சமய அறநிலைத்துறை அதிர்ச்சி அளிக்கும் வகையில் எங்களை பூஜை செய்யக்கூடாது என கூறிகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக எங்களை பூஜை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும். இது குறித்து நாங்கள் மனு அளித்துள்ளோம்” என்றார்.