மதுரை:டிஎன்பிஎஸ்சி (TNPSC) குரூப்-2(507) மற்றும் குரூப்-2 ஏ(2,327) பணியிடங்களுக்கான போட்டித் தேர்விற்கான அறிவிப்பு கடந்த ஜூன் 20ஆம் தேதி வெளியாகி ஜூலை 19 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான ஹால் டிக்கெட் மற்றும் தேர்வர்கள் பின்பற்றவேண்டிய வழிமுறைகள் தேர்வாணையத்தின் இணையத்தளத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அதன்படி, தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 2,763 தேர்வு மையங்களில் சுமார் 7,93,947 பேர் இந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளை வரும் 14ஆம் தேதி எழுதவுள்ளனர். இந்த நிலையில், குரூப் 2 தேர்விற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி புதுக்கோட்டையைச் சேர்ந்த குணசீலன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், "தமிழகத்தில் குரூப் 2 தேர்வு செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளன. இந்த குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு முன்பாக டிஎன்பிஎஸ்சி விடைத்தாள் நகலை வழங்குவதில்லை. தேர்வில் வெளிப்படைத் தன்மையும் பின்பற்றப்படுவதில்லை.
இதையும் படிங்க:கல்யாண ராணி சத்யாவுக்கு ஜாமின்! நீதிபதி சொன்ன காரணம்!
மேலும், தேர்வுகளுக்கான இறுதி விடை குறிப்பையும் வெளியிடுவதில்லை. தேர்வுகளுக்கான அறிவிப்பில், தெரிவுப்பணி முழுமையாக நிறைவடையும் வரை இறுதி விடை, விடைத்தாள் நகல் வழங்கப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கது அல்ல.
ஆகவே, இறுதி விடை குறிப்பு மற்றும் விடைத்தாள் நகல் பெறுவது தொடர்பான விதிகளை சட்டவிரோதமானது என அறிவித்தும், தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு முன்பாக டிஎன்பிஎஸ்சி விடைத்தாள் நகலை வழங்கவும் உத்தரவிட வேண்டும். மேலும், வழக்கு முடியும் வரை குரூப் 2 தேர்வை நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி விஜயகுமார், வழக்கு தொடர்பாக TNPSC-யின் செயலர் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தார். இத்தகைய சூழலில், இன்னும் 2 நாட்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடைபெறவுள்ள நிலையில், இந்த வழக்கு தேர்வர்களின் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.