திருச்சி:திருச்சிகோட்டை ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் மூன்று இளம்பெண்கள் மாடர்ன் உடையில் நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. சோசியல் மீடியாவில் இதுபோன்ற டான்ஸ் வீடியோக்கள் பழகிப்போனதாக பார்க்கப்பட்டாலும், ரயில் நிலையத்தில் அத்துமீறி டான்ஸ் ஆடி வீடியோ எடுத்தது சர்ச்சையானது.
மேலும், இளம்பெண்கள் அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளனர். இதனைப் பார்த்த பலரும் ரயில் நிலையத்தில் நடனமாட எப்படி அனுமதி கிடைத்தது? அவர்களை யாரும் தடுக்கவில்லையா? என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “பேருந்து, ரயில் மற்றும் விமான நிலையம் போன்ற பொது இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக நடனம் மற்றும் நாடகம் போன்றவை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை அனுமதி பெற்று நடத்தப்படுவது வழக்கம். ஆனால், பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள ரயில் நிலையத்தில் நடனமாட அனுமதி பெற்றார்களா? அல்லது அனுமதி பெறாமல் இவர்களாகவே நடனம் ஆடினார்களா? என்பது தெரியவில்லை.
ஊடகத்துறையினர் ரயில் நிலையங்களில் புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவு செய்ய முறையாக ரயில்வே காவல்துறை அனுமதி பெற்று அதன்பிறகு தான் ஒளிப்பதிவு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், சாதாரணமாக இந்த பெண்கள் ரயில் நிலையத்தில் எப்படி கவர்ச்சி நடனம் ஆடினார்கள் என்று தெரியவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து, திருச்சி கோட்டை ரயில்வே போலீசார், நடனம் ஆடிய 3 பெண்கள் மற்றும் அதனை வீடியோ ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் ஆகிய நான்கு பேர் மீதும் பொதுமக்களுக்கு இடையூறு செய்வது மற்றும் பொது இடத்தில் அனுமதி இன்றி கூட்டத்தைச் சேர்ப்பது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நான்கு பேருக்கும் தலா 2,000 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், இது போன்ற செயல்களில் மீண்டும் ஈடுபடக் கூடாது என எச்சரித்து அனுப்பினர்.
இதையும் படிங்க:2 வயதில் காணாமல் போன குழந்தை 14 வயதில் எப்படி இருப்பார்?.. ஏஐ மூலம் தேடும் காவல்துறை!