கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கடந்த 19ஆம் தேதி தேர்தல் அன்று ஶ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த கோமதி என்பவர் குடும்பத்தினர் கண்முன்னே திமுகவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்தார்.
மேலும், இந்தச் சம்பவத்தில் திமுகவினர், தங்கள் கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக, இந்தப் பாதகச் செயலைச் செய்திருப்பதாகத் தனது எக்ஸ் தளத்திலும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, கடலூர் மாவட்ட காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தியில், "கடந்த ஏப்ரல் 19 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில், ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமாணியம் கிராமத்தில் உள்ள ஆலமரம் முன்பு இரு தரப்பினருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது.
இந்த தகராறில், இரு தரப்பினரும் ஆயுதம் ஏந்தாமல் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள, கோமதி தலையிட்டு, பிரச்னையை தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் ஆரம்பச் சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.