தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூட்டு தலையை தூக்கிய போலீஸ்.. 100 மாணவர்கள் மீது வழக்கு! - chennai Route Thala arrested - CHENNAI ROUTE THALA ARRESTED

Pachaiyappas student Route Thala clash: சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பேருந்து மேற்கூரையின் மீது ஏறி அடாவடி செய்த விவகாரம் தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

College students
பேருந்தின் மேற்கூரையில் கல்லூரி மாணவர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 10, 2024, 6:43 PM IST

சென்னை: சென்னையில் கடந்த ஜூலை 5ஆம் தேதி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 'ரூட்டு தலை' பிரச்னையில் ஈடுபட்டு பேருந்தின் மேற்கூரை மீது ஏறி அட்டகாசம் செய்தும், கல்லூரி கேட்டின் மீதும் ஏறினர். மேலும், கல்லூரி வளாகம் முன்பு பட்டாசுகள் வெடித்து போக்குவரத்திற்கு பெரும் இடையூறு செய்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அவர்களை கட்டுப்படுத்த முயன்றும் மாணவர்கள் காவல்துறையினரை மதிக்காமல் தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சம்பவம் குறித்து கீழ்பாக்கம் மற்றும் அமைந்தகரை காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டன. அதனை அடுத்து, கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பச்சையப்பன் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவர் ஒருவரையும், 2022ஆம் ஆண்டு படித்து முடித்த பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் மாணவரும், 53 தடம் எண் கொண்ட பேருந்து ரூட்டின் தலையாக இருந்த தங்கமணி என்பவரையும் கைது செய்துள்ளனர்.

மேலும், விசாரணை நடத்தி அவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில், 100 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், பேருந்து மேற்கூரை மீது ஏறி ஆட்டம் போட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பாலியல் ரீதியாக அழைத்து வழிப்பறியில் ஈடுபடும் திருநங்கைகள்? கோயம்பேடு பயணிகள் அச்சம்!

ABOUT THE AUTHOR

...view details