நீலகிரி:நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதி தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களின் எல்லைப் பகுதியாக விளங்குகிறது. மலை பிரதேசமான நீலகிரிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் கூடலூர் வழியாகவே செல்கின்றனர். இந்த நிலையில் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு கடந்த ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு விடுமுறை மற்றும் அதைத் தொடர்ந்து சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் அடுத்தடுத்து விடுமுறை விடப்பட்டு இருந்ததால், கடந்த 3 நாட்களாக நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
இதனிடையே கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள், தங்களது சொந்த காரில் நீலகிரிக்கு சுற்றுலா வந்து, சுற்றுலாவை முடித்து விட்டு, கூகுள் மேப் (Google Map) உதவியுடன், மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். இந்த நிலையில் கூடலூர் அருகே வந்த போது, கூகுள் மேப் காட்டிய வழியில், திடீரென செங்குத்தான படிக்கட்டுகள் வந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கார் ஓட்டுநர், காரை சாதூரியமாக படிக்கட்டுகளில் நிறுத்தினார்.