தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மிளகாய் மாலை, நெல் மாலை அணிந்து வேட்புமனுத் தாக்கல் செய்த வேட்பாளர்கள்! - Lok Sabha Election Nomination

Lok Sabha Election Nomination: கோயம்புத்தூர், திருநெல்வேலி, திருச்சி மற்றும் தென்காசி உள்ளிட்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் வேட்பாளர்கள் மிகவும் வித்தியாசமான முறையில் வேட்புமனுத் தாக்கல் செய்த நிகழ்வு காண்போருக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Lok Sabha Election Nomination
Lok Sabha Election Nomination

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 26, 2024, 11:05 PM IST

Lok Sabha Election Nomination

நாடாளுமன்றத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏப்.19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்களுக்கு, மார்ச் 20ஆம் தேதி முதல் மார்ச் 27ஆம் தேதிவரை வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, கடந்த வாரம் மாநிலம் முழுவதும் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது.

ஆனால், வேட்புமனுத் தொடங்கிய முதல் நாள் பலரும் மனுத் தாக்கல் செய்ய ஆர்வம் காட்டவில்லை. அந்த வகையில், முதல் மூன்று நாட்களில் மொத்தமாக 78 வேட்பாளர்கள் மட்டுமே வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், நேற்று (மார்ச் 25) ஒரே நாளில் மட்டும் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களும் என மொத்தமாக 405 வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், நாளையுடன் (மார்ச் 27) வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெறவுள்ள நிலையில், இன்றும் (மார்ச் 26) தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாகப் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். அதிலும் குறிப்பாக, கோயம்புத்தூர், திருநெல்வேலி, திருச்சி மற்றும் தென்காசி உள்ளிட்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் மிகவும் வித்தியாசமான முறையில் வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றுள்ளது.

கோயம்புத்தூர்: கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளரான நூர்முகமது என்பவர், ஓட்டுக்குப் பணம் வாங்கினால் மக்களை அடிமையாக்கி தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள் எனக் கூறி மிளகாய் மாலையுடன் வேட்புமனுத் தாக்கல் செய்ய ஊர்வலமாக வந்தார். இதேபோல, கோவை மாவட்டம் செல்வபுரத்தைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளரான துரைசாமி என்பவர், நடனமாடிக் கொண்டும் மற்றும் முருகா முருகா என்று தொடர்ந்து பாடிக்கொண்டும் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்திருந்தார்.

திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளரான அதிசய பாண்டியன் என்பவர், தலையில் பச்சை துண்டை அணிந்து நெல்லுக்கு ஆதார விலையாக 4,000 ரூபாய் வழங்க வேண்டும் எனக் கூறி கழுத்தில் நெல் மணிகளை மாலையாக அணிந்து, மாட்டு வண்டியில் நூதன முறையில் வருகைதந்து, நெல்லை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கார்த்திகேயனிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

திருச்சி:கடைகளிலும், பொது இடங்களிலும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 10 ரூபாய் நாணயங்களைக் கொண்டு வந்து நூதனமான முறையில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்புமனுவைத் தாக்கல் செய்ததாகத் தெரிவித்துள்ளார் சுயேச்சை வேட்பாளரான ராஜேந்திரன்.

தென்காசி:தென்காசி நாடாளுமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இசை மதிவாணன், தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து மாட்டு வண்டியில் கையில் வேலுடன் நூற்றுக்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி தொண்டர்களுடன் வழிநெடுக கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக வந்து வேட்புமனுவைத் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கமல் கிஷோரிடம் வழங்கினார்.

இதையும் படிங்க:“குழந்தை ராமரை பார்க்க அழைத்துச் செல்வேன்”.. முதல் வாக்குறுதியாக அளித்த சிதம்பரம் பாஜக வேட்பாளர்!

ABOUT THE AUTHOR

...view details