மதுரை:இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களுக்காக அதிகமாக அந்நியக் கடன்களைப் பெறுவதைக் குறைப்பதுடன், நிதிப்பற்றாக்குறையை குறைந்தபட்சம் 4 விழுக்காடாகக் குறைக்க முயன்றால், நாட்டின் வளர்ச்சி இன்னும் சிறப்பாக அமையும் என்று பொருளாதாரப் பேராசிரியர் முனைவர் முத்துராஜா கூறியுள்ளார்.
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (பிப்ரவரி 1) காலை 11 மணிக்கு 2025-26ஆம் நிதியாண்டுக்கான ஒன்றிய நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது குறித்து அமெரிக்கன் கல்லூரி பொருளாதாரத்துறை தலைவர் பேராசிரியர் முத்துராஜா கூறுகையில், “நேற்று சமர்ப்பிக்கப்பட்ட இந்திய பொருளாதார ஆய்வறிக்கையில் மிக முக்கியமாக மூன்று கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
பணவீக்கம் மற்றும் விலைவாசி அதிகரிப்பு:
பட்ஜெட்டில் பணவீக்கம் மிக முக்கியமான ஒன்றாகும். இந்தியாவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தால், விலைவாசி அதிகரிப்பதோடு, மக்களின் வாங்கும் சக்தி குறைகிறது. இதனால் பொருளாதாரத் தேக்கநிலை உருவாகும். இரண்டாவதாக, அந்நியச் செலாவணி கையிருப்பு. அடுத்த 11 மாதங்களுக்கு இறக்குமதியைச் சரி செய்வதற்கான கையிருப்பு இருக்கிறது என்கிறது பொருளாதார ஆய்வறிக்கை. ஏனென்றால், அதிகமான அளவில் அந்நியச் செலாவணி கையிருப்பில் இல்லை என்பதுதான் இதன் பொருள்.
இதனைத் தவிர்க்க நமது உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும். இதில் நாட்டின் வளர்ச்சியும், அந்த வளர்ச்சி எல்லோரையும் சென்றடைவது என்ற இரண்டு விசயங்கள் மிக முக்கியமாகும். இந்திய அரசின் வரவு, செலவு திட்டத்தை பொருளாதார மாணவனாக வரவேற்கிறேன். காரணம், கடந்த 10-15 ஆண்டுகளாக இந்தியாவில் பணவீக்கம், பெண்களுக்கான வாய்ப்பு, கிராமப்புற முன்னேற்றம், இளைஞர்களுக்கான வாய்ப்பு, தொழில்நுட்பத்தில் பின்தங்கிய நிலை போன்ற பல்வேறு கவலைகளைக் கொண்டிருந்த நேரத்தில், அவற்றையெல்லாம் போக்கும்விதமாக இந்த வரவு, செலவுத் திட்டம் அமைந்துள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்பொழுது, ஐந்து விசயங்களைப் பட்டியலிட்டார். அதில் இரண்டு முக்கியமானதாகும். அது வளர்ச்சி மற்றும் சமச்சீரான வளர்ச்சி ஆகியவை. இதில், நாம் எதிர்பார்த்தது 8 விழுக்காடு வளர்ச்சி. குறைந்தபட்சம் 7 விழுக்காடாவது இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், மாறாக 6.4 - 6.8ஆக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமச்சீரான வளர்ச்சி:
நமது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்தது போன்று இல்லை என்பதுதான் இதன் பொருள். ஆனால், இதில் நேர்மறையான அம்சம் என்னவெனில், வளர்ச்சியடைந்த உலக நாடுகளே கூட 2லிருந்து 3 விழுக்காடு வளர்ச்சியை மட்டுமே எட்டியுள்ள நிலையில், இந்தியப் பொருளாதாரம் 6.4 - 6.8ஆக இருப்பது சற்று ஆறுதல் தரக்கூடிய ஒன்று.
ஆனால், சமச்சீரான வளர்ச்சி என்பது மாநிலங்கள் இடையே, கிராமம், நகரங்களிடையே, ஆண், பெண் இடையே என்று அணுகும்போது அதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. இதனைக் களையும்போதுதான், சமச்சீரான வளர்ச்சி என்பது சாத்தியம். அதனைக் களையும் வகையில்தான் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.
வேறுபாடுகள் களைய முயற்சி:
இந்த பட்ஜெட்டுக்கான பாலிசி என்பதைப் பார்க்கும்போது, வேளாண்மைக்கு இந்த முறை அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகள் கழித்து இது நடைபெற்றுள்ளது. வேளாண் தொழில் நுட்பம், பெண்களுக்கான முன்னேற்றம், வேளாண் சார்ந்த தொழில் முனைவு உள்ளிட்ட அனைத்திலும் அரசின் பலன்கள் வேளாண் சார்ந்த விசயங்களுக்குச் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக வேளாண்மையில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த விசயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக, கிராம மயமாக்கல் ஊக்குவிக்கப்பட்டுள்ளது. இதில் வேளாண்மை மட்டுமன்றி, தினக்கூலிகளின் வாழ்வாதார மேம்பாடு உள்பட பல முன்னெடுப்புகள் அடங்கியுள்ளன. இதன் மூலம் நகரத்திற்கும் கிராமத்திற்குமான வேறுபாடுகளை களைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.