சென்னை:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை மாலை கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். அவரின் உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. அவரின் உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தேசியத் தலைவர் மாயாவதி இன்று காலை மலர் வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் மாயாவதி உரையாற்றினார்.
அப்போது அவர், "தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை வளர்க்க பாடுபட்டவர் ஆம்ஸ்ட்ராங். அவரது படுகொலை செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அவரது வீட்டுக்கு வெளியே இதுபோன்ற நிகழ்வு நடைப்பெற்றுள்ளது. சட்டம் - ஒழுங்கு மாநிலத்தில் சரியில்லை என்பது இச்சம்பவத்தின் மூலம் தெரிகிறது. கட்சியின் மாநிலத் தலைவருக்கே இந்த நிலை என்றால் சாமானியர்களான தங்கள் நிலைமை என்ன என்று தலித் மக்கள் அஞ்சுகிறார்கள்.