சென்னை: சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு எட்டு பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் சென்னை மாநகரம் மிகுந்த பரபரப்பில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், சம்பவம் குறித்து செம்பியம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 10 தனி படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்றைய தினமே எட்டு பேர் இக்கொலை வழக்கில் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாகவும், அதற்காக ஆற்காடு சுரேஷின் தம்பி ஆற்காடு பாலு திட்டம் தீட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கு மத்தியில் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கில் உண்மை கொலையாளிகளை கைது செய்ய வேண்டும், வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும், அரசு மரியாதையுடன் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழக பகுஜன் சமாஜ் கட்சியினர் சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதே போல, விசிக கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த பரபரப்புக்கு மத்தியில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி நாளை (ஜூலை 7) சென்னைக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.
அதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் '' தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டவர். மாநிலத்தில் வலுவான தலித் குரலாக ஆம்ஸ்ட்ராங் அறியப்பட்டார். மிகவும் கவலையளிக்கும் இந்த சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில்கொண்டு நாளை காலை ஆம்ஸ்ட்ராங்கிற்கு அஞ்சலி செலுத்தவும், பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவும் சென்னைக்கு வர திட்டமிட்டுள்ளேன். தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். இதுபோன்ற சம்பவங்கள் மேலும் தொடராமல் இருக்க தமிழ்நாடு அரசு குற்றவாளிகளை உடனடியாக தண்டிக்க வேண்டும்'' என அவர் தெரிவித்துள்ளார்.
நாளை சென்னைக்கு வரும் மாயாவதி பின்னர் லக்னோ செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:'கைதான 8 பேர் யார்..?' ஆம்ஸ்ட்ராங் கொலையில் வெடிக்கும் பிரச்சனை.. தமிழக பகுஜன் சமாஜ் வைக்கும் கோரிக்கை!