திருநெல்வேலி: நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர நீட் எனப்படும் தேசிய நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு கொண்டுவரப்பட்ட தொடக்கத்தில் அத்தேர்வு மிகவும் கடினம் என கூறப்பட்டது. குறிப்பாக நீட் தேர்வு அறிமுகமான ஒரிரு ஆண்டுகள் சிபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களே அதிகம் வெற்றி பெற்றனர்.
ஆனால், தற்போது அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் நீட் தேர்வில் வெற்றி பெற்று பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனர். குறிப்பாக, தமிழ்நாடு அரசு பள்ளி மாணவ, மாணவிகள் நீட் தேர்வில் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவு தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.
நீட் தேர்வில் வெற்றி பெறும் ஏழை மாணவர்களுக்கு வரப் பிரசாதமாக தமிழக அரசு 7.5 சதவீதம் இட ஒதுக்கிடை கொண்டுவந்துள்ளது. இதனால், பல்வேறு மாணவர்கள் தங்கள் மருத்துவக் கனவை பூர்த்தி செய்து வருகின்றனர். தமிழக அரசின் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில், இந்த ஆண்டும் தமிழ்நாட்டில் பல்வேறு ஏழை மாணவர்கள் மருத்துவ மாணவராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திருநெல்வேலியில் ஒரே வீட்டில் அக்கா, தம்பி இருவரும் ஒரே நேரத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் தேர்வாகியுள்ளனர். திருநெல்வேலி, மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் மசூத். கூலித் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் சஜா மற்றும் மகன் முகமது அனஸ். இவர்கள் இருவரும் மேலப்பாளையம் காயிதே மில்லத் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்றுள்ளனர்.
கடந்த 2022-ல் இருவரும் ஒரே நேரத்தில் பிளஸ் 2 முடித்துவிட்டு மருத்துவராக வேண்டும் என்ற ஆசையில் நீட் தேர்வுக்கு தயாராகியுள்ளனர். அதற்காக அகாடமியில் சேர்ந்து இருவரும் படித்துள்ளனர். அதன் எதிரொலியாக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். நீட் தேர்வில், முகமது அனஸ் தரவரிசையில் 139 ஆவது இடமும், அவரது அக்கா சஜா 315 வது இடத்தையும் பிடித்துள்ளனர். இதன் மூலம் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சஜாவிற்கு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியிலும், முகமது அனஸ்சுக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியிலும் சீட் கிடைத்துள்ளது.