தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெல்லும் - பிரசாந்த் கிஷோர் பரபரப்பு பேச்சு! - PRASANTH KISHORE

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு விழாவில் பேசிய தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெறும் என்றார்.

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பேச்சு
தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பேச்சு (ETV Bharat Tamil)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 26, 2025, 12:22 PM IST

Updated : Feb 26, 2025, 3:12 PM IST

பூஞ்சேரி, செங்கல்பட்டு:தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது.

இதில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டார். அவரை மேடைக்கு வரவழைத்த தவெக தலைவர் விஜய், அவருக்கு திருக்குறள் நூல் மற்றும் தந்தை பெரியார் சிலை ஆகியவற்றை வழங்கி கௌரவித்தார். பின்னர் நிகழ்ச்சியில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பேசியதாவது:

வணக்கம் என தமிழில் பேச்சைத் தொடங்கிய பிரசாந்த் கிஷோர்

"வணக்கம்...நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்த தவெக தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி. கடந்த சில வாரங்களாக தவெக மற்றும் பிரசாந்த் கிஷோர் குறித்து பல்வேறு கருத்துகள் ஊடகங்களில் உலா வருகிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்றுள்ளேன். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் தவெகவுக்கு கிடைக்கும் வெற்றி என்பது என்னால் கிடைக்கும் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

தவெகவின் ஒவ்வொரு உறுப்பினரின் உழைப்புக்கும் கிடைக்கும் பரிசு தான் வரும் தேர்தலில் கிடைக்கப் போகவும் வெற்றி. தவெக தொண்டர்களின் தேர்தல் பணிக்கு நான் உறுதுணையாக இருப்பேன். கடந்த 4 ஆண்டுகளாக தேர்தல் வியூக வகுப்பாளர் பணியை நான் செய்யவில்லை. கடந்த 2021-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு கட்சிக்கு பணியாற்றினேன். அதே போல் மேற்கு வங்கத்திலும் ஒரு கட்சிக்கு பணியாற்றினேன். அதன் பிறகு யாருக்கும் தேர்தல் பணியாற்றவில்லை. எனது ஓய்வை அறிவித்தேன்.

4 ஆண்டுகளுக்குப் பிறகு நான் இப்போது ஏன் இங்கு வந்துள்ளேன்?

எனது தேர்தல் வியூகம் தவெகவுக்கு தேவையில்லை. ஆனால், எனது நண்பரும், சகோதரருமான விஜய்-க்கு உதவ வந்துள்ளேன். என்னைப் பொருத்தவரை விஜய் ஒரு தலைவர் அல்ல. ஆனால், தமிழ்நாட்டின் நம்பிக்கை அவர். அதே போல் தவெகவை நான் அரசியல் கட்சியாக பார்க்கவில்லை. அதனை ஒரு புதிய அரசியல் இயக்கமாக பார்க்கிறேன். தமிழ்நாட்டில் கடந்த 30 முதல் 35 ஆண்டுகளாக என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்பது உங்களுக்குத் தெரியும். அதனை மாற்ற வேண்டிய நேரம் இது. விஜய் தலைமையிலான தவெக அந்த மாற்றத்தை தமிழ்நாட்டில் கொண்டு வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

தமிழ்நாட்டு மக்களை எனக்கு மிகவும் பிடிக்கும்

விஜய்யின் அர்ப்பணிப்பு, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் மற்றும் அனைவருக்கு வாய்ப்பு தர வேண்டும் என்ற குணத்தைப் பார்த்த பின்பு தான் இங்கு நிற்கிறேன். தமிழ்நாட்டு மக்களை எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ்நாடு அரசியலைப் பற்றி எனக்கு ஓரளவு தெரியும். அது தொடர்பாக ஆய்வு செய்துள்ளேன். அதனால் உங்களுக்கு ஒரு வாக்குறுதியை தருகிறேன். அடுத்த தேர்தலில் தவெக வென்றால், இங்கு உட்கார்ந்து இருக்கக் கூடிய பலர் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள். இதனை நான் எழுத்துப்பூர்வமாகவும் தருகிறேன்.

தமிழில் பேச தற்போது பயிற்சி எடுத்து வருகிறேன். 2026-தேர்தலில் தவெக வெற்றி விழாவில் நான் தமிழில் பேசுவேன் என்று உறுதியாக கூறுகிறேன். நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் நான் தேர்தல் வியூக வகுப்பாளர் பணியை செய்துள்ளேன். ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு பிரச்னை உள்ளது. கல்வி சார்ந்த விஷயங்களில் குஜராத் மாடல் என்பது சிறந்தது என்பது எனது கருத்து. வளர்ச்சித் தொடர்பான விஷயங்களில் தமிழ்நாடு மாடல் சிறந்தது.

தமிழ்நாடு மாடலின் தற்போதைய நிலை என்ன?

ஆனால், ஊழல், மதவாதம் மற்றும் வாரிசு அரசியல் ஆகியவற்றில் தமிழ்நாடு மாடல் சிக்கியுள்ளது. ஊழல், மதவாதம் மற்றும் வாரிசு அரசியல் போன்ற பிரச்னைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு விடுதலை வேண்டும். தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்தால் இந்த நிலை மாறும் என நம்புகிறேன். மற்ற மாநிலங்களை விட பல்வேறு துறைகளில் தமிழ்நாடு மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளது. ஆனால், ஊழலால் தமிழ்நாட்டின் வளர்ச்சி தடைபடுகிறது. அரசியலில் ஊழல் இல்லாத நிலையைை உருவாக்க முடியாது. இந்தியா வளர்ச்சி அடைந்த நாடு என்று நாம் கூறிக் கொண்டிருந்தாலும், மக்கள்தொகையில் 20 சதவீதம் பேர் மதக்கலவர அச்சத்திலேயே உள்ளனர்.

மதவாதத்திற்கு எதிரான நிலையில் தமிழ்நாடு

மதவாதத்திற்கு எதிரான நிலையில் தமிழ்நாடு எப்போதும் இருந்து வருகிறது என்பது பெருமைக்குரியது. இருந்தாலும், வரும் காலங்களில் எந்த ஒரு மதவாத சம்வத்திற்கும் தமிழ்நாடு இடம் கொடுத்துவிடக் கூடாது என்பதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். வாரிசு அரசியலுக்கு பெரிய அளவில் இங்கு எதிர்ப்பு இல்லை. வாரிசு அரசியலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த புரிதல் பெரிதாக இல்லை.உதாரணமாக, கவாஸ்கர் மற்றும் கபில் தேவ் ஆகியோரின் மகன்கள் மட்டும் விளையாடிக் கொண்டிருந்தால், சச்சின் மற்றும் தோனி போன்ற மிகச் சிறந்த வீரர்கள் நமக்கு கிடைத்திருக்க மாட்டார்கள்.

தமிழ்நாட்டில் தோனியை விட நான் பிரபலமானவன் அல்ல. ஆனால், அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெற நான் உதவினால், தோனியை விட நான் தான் பிரபலமானவனாக இருப்பேன். துணிவு, இரக்கம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை தவெக தொண்டர்கள் கடைபிடிக்க வேண்டும். அடுத்த 100 நாட்களுக்குள் தவெக உறுப்பினர்களின் எண்ணிக்கையை 10 மடங்கு உயர்த்த வேண்டும். நன்றி...வணக்கம்...

இவ்வாறு பிரசாந்த் கிஷோர் பேசினார்.

Last Updated : Feb 26, 2025, 3:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details