தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கால்பந்து கோல் போஸ்ட் விழுந்து 2ஆம் வகுப்பு சிறுவன் உயிரிழப்பு! - AIR FORCE STUDENT DEATH

ஆவடி அருகே இந்திய விமானப்படை குடியிருப்பில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவன் மீது கால்பந்து கோல் போஸ்ட் விழுந்ததில், அவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 1, 2025, 12:41 PM IST

திருவள்ளூர்:ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார். இவர் ஆவடி விமானப்படை பள்ளியில் 2ஆம் வகுப்பு பயின்று வந்தார். இந்த நிலையில், சிறுவன் இந்திய விமானப்படை குடியிருப்பில் உள்ள மைதானத்தில் நேற்று (ஜன.31) மாலை 5 மணியளவில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கிருந்த இரும்பாலான கால்பந்து கோல் போஸ்ட், எதிர்பாராத விதமாக சிறுவனின் தலை மீது விழுந்துள்ளது. இதில் தலையில் சிறுவன் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் சிறுவனை உடனடியாக மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

அப்போது மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, தகவல் அறிந்து சென்ற முத்தா புதுப்பேட்டை போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிகள்:சுமையுந்தில் இருந்து கொட்டிய கழிவுகள்.. சறுக்கி விழுந்த வாகன ஓட்டிகள்!

மேலும் இந்த சம்பவம் குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது இரும்பு கோல் போஸ்ட் விழுந்ததில், அச்சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details