தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் உள்ள முக்கிய பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. பதறிய பெற்றோர்கள்! - Bomb Threats in Madurai Schools - BOMB THREATS IN MADURAI SCHOOLS

மின்னஞ்சல் மூலமாக மதுரையில் உள்ள சில முக்கிய பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதனால் மதுரையின் முக்கிய சில பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளி
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளி (credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 30, 2024, 1:43 PM IST

மதுரை: மதுரையில் உள்ள சில முக்கிய பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனைக்குப் பிறகு மிரட்டல் வெறும் வதந்தி என தெரிய வந்ததையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று (செப்.29) பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, நாளை விருதுநகரில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று மாலை மதுரை வருகிறார். இந்த நிலையில் மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் சில பள்ளிகளுக்கு மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பாக காணப்பட்ட பள்ளி (credits - ETV Bharat Tamil Nadu)

இதனை அடுத்து மிரட்டல் விடப்பட்ட பள்ளிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் வெடி பொருட்களோ அல்லது வேறு அபாயகரமான பொருட்களோ கண்டறியப்படவில்லை எனவும், வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னை: தனியார் மருத்துவமனை உரிமை பிரச்சனை.. பெண் பரபரப்பு புகார்.. மருத்துவர் அளித்த விளக்கம் என்ன?

இதன் தொடர்ச்சியாக பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததற்கான காரணம் என்ன? வேறு ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்பது குறித்து மதுரை மாநகர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதனால், குறிப்பிட்ட பள்ளிகள் முன்பாக பெற்றோர்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெரும்பாலான பள்ளிகளில் தற்போது காலாண்டு தேர்வு முடிந்து மாணவர்கள் விடுமுறையில் உள்ளனர். ஆனால், சிபிஎஸ்இ பள்ளிகளில் மட்டும் தற்போது காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details